தாய் மடி 

தெலுங்கில் – டாக்டர் முக்தேவி பாரதி

தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

 

“உங்களுக்கு என் மாணவி லதாவை நினைவிருக்கா?”

 

கணவன் ரவீந்திரனின் கையில் காபி கோப்பையைக் கொடுத்து விட்டு வினவினாள் சீதா.

“ஊ…ம்!” என்றான் ரவீந்திரன் பார்வைவையை செய்தித் தாளிலிருந்து திருப்பாமலே.

“லதாவும் அவள் குழந்தையும் இன்னும் ஒரு மணி நேரத்தில் நம்ம வீட்டுக்கு வர்றாங்களாம்!” என்று சீதா மேற்கொண்டு விவரமளித்தாள்.

ரவீந்திரன் பதில் கூறவில்லை.

“சரியாகக் கேளுங்களேன்! அந்த லதா நம்ம வீட்ல நாலு நாள் இருப்பாளாம். அந்த குழந்தையை அந்த  நாலு நாளும் நாம தான் பார்த்துக்கணும்”

“சரி. சீதா….வரட்டும். நீ குழந்தையைப் பார்த்துக்கோ. அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றே? நீ தான் லீவு போட்டுட்டு கவனிச்சுக்கணும்” என்றான் ரவீந்திரன்.

“ஆமாங்க. லீவு போடணும் …!” என்றாள் யோசனையோடு.

“போடு!” என்றான் ரவீந்திரன்.

“நானில்லை. நீங்க தான் லீவு போடணும்” என்றாள் சீதா தயங்கி கொண்டே.

“என்னது?” தூக்கிவாரிப் போட்டது ரவீந்திரனுக்கு. “மேடத்தோட ஸ்டூடண்ட் ஆபீஸ் வேலையா வராளாம். அவ குழந்தையை நான் ஆபீஸ் லீவு போட்டுட்டு பார்த்துக்கணுமாம் . இது என்ன நான்சென்ஸ்? சீதா! இன்று நானும் என் பாஸும் கேம்ப் போகப் போறோம். என்னால் லீவு போட முடியாது” கோபத்தோடு முறைப்பாகக் கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான் ரவீந்திரன்.

 

அவன் பின்னாலேயே சென்றாள் சீதா. “சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்! எங்க காலேஜுக்கு யுஜிஸி லேர்ந்து அதிகாரிங்க வராங்க. ஒரு நாள் கூட லீவு எடுக்கக் கூடாதுன்னு பிரின்சிபல் ஏற்கெனவே ஆர்டர் போட்டுட்டாங்க. நான் வீட்ல இல்லாட்டா என்ன ? அதுக்காக கவலைப்பட ஒண்ணும் இல்லை. நம் வேலைக்காரியின் மகள் துர்காவை குழந்தையைப் பார்த்துக் கொள்ள சொல்லலாம். ஆனால் வீட்ல பெரியவங்க யாருமில்லாம அவள் கிட்டே தனியா வீட்டை எப்படி ஒப்படைக்கறதுன்னு தான் உங்களை லீவு போடச் சொல்றேன்”.

“அந்த மாதிரி வேலையெல்லாம் என்கிட்டே கொடுக்காதே சீதா. எனக்கு வராது”.

“நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம். குழந்தைக்கு பால்  கொடுப்பது, தூங்க வைப்பது எல்லாம் துர்கா பார்த்துக்குவா. நீங்க சும்மா வீட்ல இருந்தா போதும். இந்த அளவு கூட மனிதாபிமானம் இல்லாட்டா எப்படீங்க? அந்த நாள்ல லதாவோட தந்தை எங்க குடும்பத்துக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். ஏதோ இந்த சின்ன உதவி கூட செய்ய நாம மறுக்கலாமா சொல்லுங்க!” சீதா நியாயங்களை எடுத்துக் கூறி வாதிடுபவள் போல் பேசினாள்.

அழைப்பு மணி  ஒலித்தது. லதா இடுப்பில் கைக் குழந்தையோடு  நின்றிருந்தாள். உள்ளே அழைத்து உட்கார வைத்தாள் சீதா.

“மேடம்! இந்த வருடம் பொங்கலுக்கு உங்களையும் அங்கிளையும் எங்க அப்பா ஊருக்கு வரச் சொல்லி சொன்னார் மேடம். முன்னாடியே சொல்லிட்டா லீவுக்கு அப்ளை செய்து ரயில் டிக்கெட் புக் செய்ய சௌகரியமா இருக்கும்னு சொல்லச் சொன்னார். அதுக்குத் தான்” என்று கூறிக் கொண்டே தரை மீது ஒரு போர்வையை விரித்து குழந்தையைப் படுக்க வைத்தாள் லதா.

சீதாவும் லதாவும் சமையலறைக்குச் சென்றார்கள். ரவீந்திரன் குழந்தையை உற்றுப் பார்த்தான். நான்கு நாட்கள் லீவு போட்டு இதை நான் பார்த்துக்கணுமா?

“சீதா!’ என்று குரல் கொடுத்தான் ரவீந்திரன். “இங்கே பாரு! என் நல்ல குணத்தை நீ ரொம்ப மோசமா பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறாய். நான் பார்க்கும் உத்யோகம் என்ன? நீ எனக்கு கொடுக்கும் வேலை என்ன? ஆயா வேலை பார்க்கறவன்னு நினைச்சியா? நான் இப்பவே ஆபீசுக்குக் கிளப்பி போகிறேன்”.

“ப்ளீஸ். ஏங்க…! லதா காதில் இது விழுந்தா நல்லாயிருக்காது. மெதுவா பேசுங்க. நாலே நாலு நாள் தாங்க. ஓடியே போயிடும். நீங்க என்னத்த செய்யப் போறீங்க? எல்லாம் துர்கா பார்த்துக்குவா. நீங்க இந்த சாக்குல லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்குங்க. டிவி பாருங்க. ஏதோ அர்ஜெண்டா உதவி தேவைன்னு வந்திருக்கா. இது கூட செய்யாவிட்டால் எப்படி? இந்த குழந்தையை உங்க பேத்தின்னு நினைச்சுக்குங்க!” என்று கூறிவிட்டு அவசரமாக சமையலறைக்குத் திரும்பி விட்டாள் சீதா.

சுவர் கடியாரத்தைப் பார்த்தான் ரவீந்திரன். வேலைக்காரப் பெண் துர்கா உள்ளே வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். லதா ஹேண்ட் பேக் மாட்டிக் கொண்டு கிடுகிடுவென்று படியிறங்கி வெளியே சென்றாள். சீதா காரை ஸ்டார்ட் செய்தாள்.

ரவீந்திரன் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். தாடி வளர்ந்திருந்தது. இருக்கட்டும்… இருக்கட்டும். என் நிலைமைக்கு இது போதும். நான்கு நாட்களும் இப்படியே இருக்கப் போகிறேன் என்று நினைத்து கோபத்தோடு அந்த குழந்தையைப் பார்த்தான். ஆறு மாதக் குழந்தை. கொழு கொழுவென்று இருந்தது. மொழு மொழுவென்ற குட்டிக் கைகளில் கருப்பு மணி கோர்த்த வளையல்கள். கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு. அமைதியாக உறங்கி கொண்டிருந்தது. பச்சைக் குழந்தைகள் பரமாத்மாவின் சொரூபம் என்று கூறுவார்கள். இதன் மேல் எனக்கு என்ன கோபம்? என் கோபமெல்லாம் சீதா மீது தான் என்று நினைத்துக் கொண்டான்.

ரவீந்திரன் டிவி ஆன் செய்து கொண்டு சோபாவில் அமர்ந்தான். குழந்தை அழத் தொடங்கியது. துர்கா எங்கே போனாள்? டக்கென்று எழுந்து வந்தான் ரவீந்திரன். துர்காவும் இன்னொரு சிறுமியும் வாசல் வராண்டாவில் பாண்டி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். குழந்தையின் அழுகை அதிகமானது. ரவீந்திரன் குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.

“துர்கா! உள்ளே வா! குழந்தையை கவனிக்காம விளையாடுகிறாயே!” என்று கோபமாக குரல் கொடுக்கவே, துர்காவோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பயந்து போய் வெளியே ஓடி விட்டாள். துர்கா வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள். அது இன்னும் வேகமாக அழுதது.

“இந்தா! இந்த பால் பாட்டில்ல பால் இருக்கு பாரு. கீழே உட்கார்ந்து குழந்தைக்கு கொடு” என்றான் ரவீந்திரன். இரண்டு வாய் பாலைக் குடித்து விட்டு மீண்டும் அழத் தொடங்கியது குழந்தை.

ரவீந்திரனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“துர்கா! குழந்தைக்கு டைபர் மாத்து. ஒண்ணுக்கு போயிடுச்சோ என்னவோ பாரு!” என்றான்.

துர்கா பயந்தவளாக குழம்பிப் போய் விழித்தாள்.

“என்ன முழிக்கறே? டைபர் மாத்து” என்றான் ரவீந்திரன்.

“அதை எப்படி அவுக்கணும்… எப்படி கட்டணும்னு எனக்குத் தெரியாதுங்க ஐயா!” என்றாள் துர்கா. அழுது விடுவாள் போலிருந்தது.

வேறு வழியின்றி ரவீந்திரன் குழந்தையின் டைபர் அவிழ்த்து வேறு மாட்டி விட்டான்.

“சீ! சீ! சீதா! இப்படி என்னை மாட்டி விட்டாயே!” என்று கறுவிக் கொண்டான்.

ரவீந்திரன் உள்ளே சென்று காபி கலந்து கொண்டு வந்தான். அதற்குள் துர்காவின் மடியில் குழந்தை தூங்கி விட்டிருந்தது.

*

ரவீந்திரன் டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான். போன் ஒலித்தது. லதா பேசினாள்.

“அங்கிள்! சொல்ல மறந்து விட்டேன். குழந்தைக்கு மருந்து சிரப் ஒரு டிராப் கொடுக்கணும். துர்காவுக்கு தெரியுமோ தெரியாதோ. நீங்க பார்த்து குடுத்துடுங்க அங்கிள்!” என்றாள். ‘சரி” என்று சொல்லி உடனே போனை வைத்தான்  ரவீந்திரன்.

அப்படீன்னா? இந்த பாப்பாவுக்கு டைபர் மாத்தணும். மருந்து கொடுக்கணும். பவுடர் பூசணும். கவுன் மாத்தணும். சரிதான்…! கோபத்தோடு டிவியை அணைத்து விட்டு எழுந்தான்.

குழந்தை தூக்கத்தில் காலை அசைத்து விட்டு மீண்டும் தூங்கினாள். அவள் விழித்துக் கொண்டு பசியில் அழுவதற்குள் பால் சீசாவைக் கழுவி பால் நிரப்பி வைக்க வேண்டும். எங்கே அந்த துர்கா? மணியைப் பார்த்தான். பதினொன்று. எங்கே போனாள் அந்த சிறுமி? ரவீந்திரனுக்கு மனைவி மேல் கோபம் தாங்கவில்லை. போன் செய்து பார்த்தான். சுவிட்சிடு ஆப் என்றது மறு முனை. அதற்குள் குழந்தை விக்கி விக்கி அழத் தொடங்கியது.

சீ! சீ! இந்தப் பெண்கள் வேலைக்குப் போகா விட்டால் குடி முழுகி விட போகிறதா என்ன? எங்க அம்மாவும் பாட்டியும் வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போனார்களா என்ன? வீட்டில் இருந்து சௌகர்யமாகக் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவில்லையா? அம்மோ! இந்த வார்த்தையை நான் உரத்துச் சொல்லி விட்டால் அவ்வளவுதான்! தொலைந்தேன்…! “பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்று கட்டுப்படுத்திய ஆபீசர் ரவீந்திரன்!” என்று பெண் உரிமை சங்கங்கள் கூச்சல் போட ஆரம்பித்து விடுவார்கள். டிவி  சானெல்ஸ் எல்லாம் சேர்ந்து உயிரை வாங்கி விடுவார்கள் இந்த சீதாவை என்ன செய்தால் தேவலாம்…? கோபத்தில் ரவீந்திரன் பல்லைக் கடித்தான். குழந்தையோ

நிறுத்தாமல் அழுததால் முகம் சிவந்து போனது.

குழந்தையை தூக்கி தோளில் சாய்த்துத் தட்டினான் ரவீந்திரன். மனைவி சீதா மீதும், அவள் மாணவி லதா மீதும், சிறுமி துர்கா மீதும் வந்த கோபமெல்லாம் பாப்பாவின் முதுகின் மீது கெட்டியாக விழுந்தது. அது இன்னும் வீல் வீலென்று உதைத்துக் கொண்டு அழுதது.

காலையில் சீதா சொன்னது நினைவுக்கு வந்தது. “தோளில்  சாய்த்துக் கொண்டு தட்டி தாலாட்டு பாடினால் போதும். குழந்தைகள் அப்படியே தூங்கிடுவாங்க!” என்றாள். நான் இப்போது தாலாட்டு பாட வேண்டுமா? ‘டேய் ரவீந்திரா! இந்த சீதா  மேடமும் அவள் மாணவிகளும் சேர்ந்து உன்னைப் பந்தாடுகிறார்களடா!’ என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான். அதற்குள் பாவம்! அவன் தோளிலேயே தூங்கி வழிந்தது குழந்தை. மெதுவாக அதனை மெத்தை மேல் படுக்க வைத்தான்.

*

கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் வேலைக்காரி ராமுலம்மா. “ஐயா! துர்கா வயசுக்கு வந்துட்டாங்க… ! வேலைக்கு வர மாட்டா. நானும் ஒரு வாரத்துக்கு வர இயலாதுங்க ஐயா! இந்த விஷயத்தை அம்மாகிட்டே சொல்லிடுங்க!” என்று கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டு சென்று விட்டாள்.

*

‘ஆபத்து நேரத்தில் தான் தைரியமாக இருக்க வேண்டும். அபாயத்தை உபாயத்தால் வெல்ல வேண்டும்….!’ இது போன்ற பொன் மொழிகளை எனக்காகத்தான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் போலும். ரவீந்திரன்

மூளையைக் கசக்கி யோசித்தான். முகத்தில் திடீரென்று உற்சாகம் பொங்கியது.

தன் நண்பன் ஒருவனின்  மனைவி குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ‘தாய் மடி’ என்னும் டே கேர் சென்டர் நடத்துகிறாள் என்ற விஷயம் நினைவுக்கு வந்தது. ‘அங்கே கொண்டு போய் இந்த குழந்தையை விட்டு விடலாம். ஆகா! ரவீந்திரா! புத்திசாலின்னா நீ தாண்டா!’ தனக்குத் தானே ஷொட்டு கொடுத்துக் கொண்டு மகிழ்ந்தான் ரவீந்திரன்.

*

எப்போதையும் விட அரை மணி முன்னதாகவே வந்து விட்ட சீதா, வீடு பூராவும் தேடி விட்டு பயந்து போய் பேச்சற்று நின்று விட்டாள். ரவீந்திரனும் அவன் நண்பனும் ஹாலில் அமர்ந்து சீட்டாடிக்  கொண்டிருந்தார்கள். துர்காவையும்

காணோம். குழந்தையையும் காணோம்.

“குழந்தை எங்கேங்க?” பரபரப்பாகக் கேட்டாள் சீதா.

“மேடம்! நீங்க அத்தனை பரபரப்படைய வேண்டாம். என் மனைவி நடத்தும் தாய் மடியில் பாப்பாவை சேர்த்து விட்டோம்” என்றான் ரவீந்திரனின் நண்பன் சிரித்துக் கொண்டே.

அந்த நண்பனின் மனைவியும் சீதாவுக்கு நல்ல தோழிதான். ரவீந்திரன் பாதி விளையாட்டில் எழுந்து உள்ளே வந்தான்.

“சீதா! நான் செய்தது சரிதானே?” என்று கேட்டான்.

“என்னங்க நீங்க! ஏன் இப்படி செய்தீங்க? இந்த துர்கா எங்கே போனாள்?” சீரியசாக கேட்டாள் சீதா. “லதா நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்? இந்த உதவி கூட செய்யவில்லை பாருன்னு நினைக்க மாட்டாளா?” சீதாவின் குரல் தழுதழுத்தது. “சரீ! துர்கா எங்கேங்க?” என்று கேட்டாள் மீண்டும்.

நிதானமாக விஷயத்தை எடுத்துக் கூறினான் ரவீந்திரன்.

“துர்காவும் இல்லாமல் நாங்களும் இலலாமல் நீங்க எப்படீங்க பார்த்துப்பீங்க? நிஜம் தான்!” சீதா யோசனையில் ஆழ்ந்தாள். “லதா வருத்தப்பட மாட்டாளா? அவளோட அப்பா என்னைப் பற்றி என்ன நினைப்பார்?” சீதா வருத்தத்தோடு யோசனையில் ஆழ்ந்திருக்கையில் லதா உள்ளே நுழைந்தாள். அவள் முகமே சரியில்லை. கவலை பளிச்சென்று தெரிந்தது.

“என்ன ஆச்சு லதா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” வினவினாள் சீதா.

“மேடம்! பெரிய பிரச்னை ஆயிடிச்சு மேடம். எங்க ஆபீசுல வேலை இன்னும் ஒரு வாரம் இழுத்தடிக்கும் போலிருக்குது . ஆமா…!  பாப்பா எங்கே மேடம்? தூங்கறாளா?” என்று கேட்டுக் கொண்டே அறைகளில் போய் தேடி விட்டு வந்தாள் லதா.

லதாவின் முகம் வெலவெலத்துப் போனது. “குழந்தை எங்கே மேடம்? எங்கேயும் காண வில்லையே!” தவித்தாள் லதா. “துர்காவைக் கூட காணோமே! எங்கேயாவது வெளியே தூக்கிகிட்டு போயிட்டாளா?” என்று கேட்டாள்.

“குழந்தையைப் பற்றி கவலையே படாதே லதா. உன் ஆபீஸ் வேலை ஒரு வாரமானாலும் ஒரு மாசாமானாலும் கூட குழந்தையைப் பற்றிய கவலைய விட்டு விட்டு ஹாப்பியா இருக்கலாம் இங்கேயே!” என்றான் ரவீந்திரன் உற்சாகமாக.

மேடமும் அங்கிளும் எதற்காக இவ்வளவு உற்சாகமாக சிரிக்கிறார்கள் என்று லதாவுக்குப் புரியவில்லை.

‘துர்காவும் பாப்பாவும் எங்கே அங்கிள்?” என்று மீண்டும் அவசரமாகக் கேட்டாள் லதா.

“பாப்பா தாய் மடியில் சுகமா தூங்கறா!” என்றான் ரவீந்திரனின் நண்பன்.

லதாவிடம் சீதா எல்லாவற்றையும் விவரமாகக் கூறினாள். லதா “அப்பாடா!” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“மேடம்! உங்களையும் அங்கிளையும் ரொம்ப தொந்தரவு செய்து விட்டேன்”

என்று மன்னிப்பு கேட்பது போல் கூறினாள்  லதா.

“குழந்தைகளுக்கு சின்னச் சின்ன வேலைகளை செய்து சந்தோஷப்படுவது தாய்மைப் பண்பு. அதையெல்லாம் உன் புண்ணியத்தால் இன்னைக்கு நானும் செய்து என்ஜாய் செய்தேன்” என்று ரவீந்திரன் சிரித்துக் கொண்டே கூறிய போது அனைவரும் அந்த மகிழ்ச்சியில் சேர்ந்து கொண்டனர்.

“எனக்கு பேபி சிட்டிங் உத்தியோகத்திலிருந்து விடுதலை அளித்த தாய்மடிக்கு நன்றி!” என்று கூறிச் சிரித்தான் ரவீந்திரன்.

சீதாவும் லதாவும் டே கேர் சென்டரிலிருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரக் கிளம்பினார்கள்.

AKSHRA
error: Content is protected !!