துக்கங்கள் நிறைந்த மழை மேகம் நான்

 

இந்தியில்: மகா தேவி வர்மா

தமிழில் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி

மஹாதேவி வர்மா (1907-1987) ஹிந்தி இலக்கியத்தில் “சாயா வாத்/ரஹஸ்ய வாத்” என்கிற பிரிவைச் சேர்ந்த கவிஞர். இப்பிரிவின் முக்கிய தூண்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது கவிதைகளில் கருணை, புரிதல்,துயரம் போன்ற சுவைகள் அதிகம் காணக்கிடைக்கின்றன. இவரை “நவீன மீரா பாய்” என்றழைக்கிறார்கள். ஏழு தலைமுறைகளுக்குப் பிறந்த பெண்னானதால் இவருக்கு மஹாதேவி என்று பெயரிடப்பட்டது. ஒன்பது வயதில் திருமணம். இவர் ஞானபீட விருது,பத்ம விபூஷண் விருது போன்றவைகளால் கௌரவிக்கப்பட்டவர்.

இவரது கவிதைகளில் “நான் துக்கங்கள் நிறைந்த மழைமேகம்” மிகவும் பிரபலமானது.சிறு வார்த்தைகளில் மஹாதேவி வர்மா, தன்னைப்பற்றி இந்த கவிதையில் கூறியுள்ளார்.

இந்தக் கவிதையில் தன் வாழ்க்கையை சூல் கொண்ட மேகத்துடன் ஒப்பிட்டு, ஆழ்மனதின் தாபங்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக்கவிதையை மேகத்தின் குரலாகவும்,பெண்ணின் ஆழ்மனத் தாபங்களாகவும் அதே நேரம்சமூகத்தில் பெண்களின் நிலையைக் குறிப்பதாகவும் புரிந்துகொள்ள முடிவது இக்கவிதையின் சிறப்பு

 

துக்கங்கள் நிறைந்த மழை மேகம் நான்.

அசைவுகளின் ஊடே

எப்போதும் அசைவற்று நிற்பவள்.

புலம்பல்களினூடும் கர்ஜனைகளினூடும்

எப்போதும் சிரித்து மகிழ்பவள்.

கண்களில் விளக்குகளின் ஒளியும்
இமைகளில் விரியத் தயாராய் நதியும்

எப்போதும் என்னுடன்.

இசையால் நிரம்பியவை என் ஒவ்வொரு அடியும்.

கனவுகளின் மகரந்தம் ஒவ்வொரு மூச்சிலும்.

ஒன்பது வண்ணங்கள் கொண்ட மேலாடையை

நெய்து உடுத்தியிருக்கிறது வானம்.

மலய மாருதம் என் நிழலில்இளைப்பாறுகிறது.

தொடுவானை நிறைத்த கரும்புகை போல்

என் புருவங்களின் மத்தியில் கவலைச்சுமை.

மண் மீது நான் மழையாய் பொழிந்தேன்.

புதையுண்ட விதைகளை சிறு பச்சை முளைகளாய்

நாற்புறமும் உயிர்க்க வைத்தேன்.

என் வருகையினால் எந்தப் பாதையும் அசுத்தமுறவில்லை.
நான் போகும்போதும் எந்தச் சின்னங்களையும் விட்டுச்செல்லவில்லை.
எஞ்சிநிற்பவை

அகமும் புறமும் சிலிர்க்கச் செய்யும்

நினைவுகள் மட்டுமே.

நேற்று முழங்கி

இன்று பொழிந்து

வந்த வழியே திரும்பச் செல்வேன்.

உலகம் சிலிர்த்தது என் வருகையில் மகிழ்ந்து.

விரிந்து பரந்த விசும்பின் நீள அகலங்களை நான் தழுவியபோதும்
அதன் சிறு மூலை கூட எனக்கானதில்லை.

இதுவே என் அடையாளம்.

இதுவே என் சரித்திரம்.

பொங்கிப் பொழிந்து மறைவேன்

***  

இந்தக் கவிதையின் இந்தி மூலத்தை வாசிக்க:

http://www.akshra.org/%e0%a4%ae%e0%a5%88%e0%a4%82-%e0%a4%a8%e0%a5%80%e0%a4%b0-%e0%a4%ad%e0%a4%b0%e0%a5%80-%e0%a4%a6%e0%a5%81%e0%a4%83%e0%a4%96-%e0%a4%95%e0%a5%80-%e0%a4%ac%e0%a4%a6%e0%a4%b2%e0%a5%80/

AKSHRA
error: Content is protected !!