Sivasankari

அக்ஷர குறித்து சிவசங்கரி

தற்சமயம் நம்முடைய அரசியல் சாசனம் 24 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது.

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற மகத்தான இலக்கியப் பணியை 16 வருடங்கள் மேற்கொண்டு நான் செய்து முடித்த போது அப்போது அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 18. இப்போது அந்த எண்ணிக்கைக் கூடியுள்ளது.

ஒவ்வொரு மொழி எழுத்தாளர்களையும் தொடர்புகொண்டு அவர்கள் படைப்பை வாங்கி அக்ஷர மின்னிதழில் பிரசுரம் செய்து அவற்றை வாசகர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் மாலனின் முயற்சி மகத்தானது.

பல மொழிகளில் எழுதுபவர்களின் மொழிபெயர்ப்பு தமிழில் கிடைப்பது ரொம்ப அபூர்வம். அவரவர் மொழியில் இருந்து நேரடியாகவோ அல்லது ஆங்கிலம் / இந்தி வழியாகவோ தமிழுக்குக் கொண்டு வருவது லேசில் நடக்கும் செயலல்ல.

அதை மிகுந்த சிரத்தையுடன் இலக்கியத்தின்பால் உள்ள ஆர்வத்துடன் மாலன் செய்வதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

மொழிபெயர்ப்பு மூலம்தான்  நாம் இதர மொழிகளின் இலக்கியச் சிறப்பை அறிய முடியும். இந்தியாவை மொழிபெயர்ப்பு மூலம் இணைக்க முன்வந்திருக்கும் மாலனின் முயற்சி எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மாலனுக்கும் அக்ஷர-வுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

அன்புடன்

சிவசங்கரி
எழுத்தாளர்

Dr. Sreenivasa Rao


About Akshra Dr. Sreenivasa Rao

Your initiative is a laudable one and as such is a much needed one in the present time

The portal is elegant and scrolling is smoother. I sincerely hope very soon you will be able to put up literature in all 24 Indian languages recognized by the Akademi.

I am sure in the days to come the portal will also host electronic and audio books for the benefit of the literary connoisseurs across the country, nay, the globe

Dr.  Sreenivasa Rao
Secretary
Sahitya Akademi

Madhav Kaushik


About Akshra Sri. Madhav Kaushik

I express my heartiest congratulations for this important and historical journal.

This is the only way to showcase the oneness of Indian Literature.

I hope this journal would certainly go a long way in achieving its lofty goals.

Sri. Madhav Kaushik
Vice – President
Sahitya Akademi

Kalapria

அக்ஷர குறித்து கலாப்ரியா

போபாலில் உள்ள ‘பாரத் பவன்’ என்ற அமைப்பு இந்தியக் கலைகளை அகில உலகிற்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட்து. அதனை அன்றைய முதல்வர் அர்ஜுன் சிங் ஆரம்பித்து பிரபல இந்திக் கவிஞரான அஷோக் வாஜ்பேயி பொறுப்பில் தந்தார். ஷ்யாமளா ஹில்ஸ் என்ற இட்த்தில் இருக்கும் அதை ஒரு கலைக்கோவில் என்பேன்.

அங்கே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஒருமுறை நடை பெறும் ‘Poetry Triannal” என்கிற கவிஞர்களின் சங்கமம் மிக முக்கியமானது. தமிழிலிருந்து,ஒரு முறை ஞானக்கூத்தன், மீரா போன்றோரும். இன்னொரு முறை பிரம்மராஜன், தேவதேவன் லதா ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். அகில இந்தியாவிலிருந்து அனைத்து மொழி எழுத்தாளர்களும் ஒன்று கூடி மூன்று நாட்கள் கவிதை வாசிப்பு, கருத்தரங்கு என் மிக விமரிசையாக நடந்தது. அனைத்துக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அருமையான வடிவில் புத்தமாகவும் வெளியிட்டார்கள்.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால்  ஒரே மொழி பேசும் இருவரை ஒரு அறையில் தங்க வைக்காமல், திட்டமிட்டே, வெவ்வேறு மொழி பேசுவோர் இருவரை ஒரு அறையில் தங்க வைத்திருந்தார், அஷோக் வாஜ்பேயி. முதல்நாள் அது பெரும் சங்கடமாக இருந்தது. இரண்டாவது நாள்தான் அதன் அருமை புரிந்தது. தட்டுத் தடுமாறி ஒருவருக்கொருவர் தங்கள் கவிதைகளையும் தங்கள் மொழியில் நடக்கும் கவிதைப் போக்குகளையும் குறித்து மிகுந்த தோழமையுடன் பகிர்ந்து கொண்டோம். அதந்த யோசனை கிட்டத்தட்ட ஒரு மொழி பெயர்ப்பு பட்டறை போலச் செயல்பட்டது.

என்னுடன் சஞ்சீவ் பட்லா என்ற இந்திக் கவிஞர் தங்கியிருந்தார். அவர் “Poetry chronicle” என்ற ஆங்கிலப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் இந்திய மொழியின் கவிதைகளை வெளியிடுவார். எனது ”ஸ்ரீ பத்மனாபம்” என்கிற கவிதை பற்றிப் பேசியபோது அதை அவசியம் தனக்கு மொழிபெயர்த்து அனுப்பச் சொன்னார். நகுலன் மொழிபெயர்ப்பில் அந்தக் கவிதை அதில் வெளி வந்தது. அவருடைய ஹைகு கவிதைகளை நான் தமிழில் மொழி பெயர்த்தேன். சதங்கையில் வெளிவந்த நினைவு.

இப்போது எதற்கு இந்த சுய தம்பட்டம் என்று கேட்கலாம். மாலன் முன்னெடுத்து நடத்தி வரும் அக்‌ஷ்ரா மின்னிதழைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது.

இப்போது இணையம் மூலம் பூமியே ஒரு சிறு கிராமமாகி விட்ட சூழலில் மின்னிதழில் அனைத்து இந்திய எழுத்துக்களையும் ஓரிடத்தில் சேர்ப்பது சொல்லளவில் எளிது. செயலளவில் அதைத் திறம்படச் செய்வது கடினம். அதை மாலன் மிக்க பொறுப்புடனும் ஈடுபாட்டுடனும் செய்து வருகிறார். 24 மொழிகளின் படைப்புகளை ஒரு சேரத் தருவதென்பது மிகப்பெரிய காரியம். வெளிநாட்டு எழுத்துக்களைத் தருவதுதான் சிறு பத்திரிகையின் குணாதிசயம் என்ற ஒரு பொதுப் போக்கிற்கு மாற்றாக, இந்திய மொழிகளின் படைப்புகளை இப்படி ஒருங்கிணைப்பது மிக முக்கியமான செயல். அவசியமானதும் கூட.

உலக அளவில் இந்தியப் படைப்புகள் சென்றடைய ஆங்கிலத்திலும் அந்தந்த மொழியிலும் வெளியிடுவதன் சிரமம் நன்கு புரிய முடிகிறது. இதில் மாலனுக்குத் துணையாக நிற்கும் தொழில் நுட்ப உதவியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாலனுக்கும் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த மின்னிதழ் குறித்து தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும்.என்னளவில் இதை நான் அவசியம் செய்வேன்.

அன்புடன்

கலாப்ரியா
எழுத்தாளர், கவிஞர்

Era Murukan

அக்ஷர குறித்து இரா. முருகன்

2005-ம் ஆண்டு தொடங்கி நான் பிரிட்டனில் ஸ்காட்லாந்துத் தலைநகரான எடின்பரோவில்  பணி நிமித்தமாக வசித்துக்கொண்டிருந்த நாட்கள். வார இறுதி மாலை நேரங்களில் அவ்வப்போது ஒரு கோப்பை பியரோடு அமர்ந்து, ஆங்கிலேய மற்றும் சக இந்திய நண்பர்களுடன் கலை, இலக்கியம், வரலாறு குறித்து உரையாடுவது வழக்கம்.

இப்படியான ஓர் அமர்வின் போது ஒரு ஸ்காட்டிஷ் நண்பர், ‘ஸ்காட்டிஷ் இலக்கியம்’ என்ற சொற்றொடரை எடுத்தாண்டார். “ஸ்காட்லாந்திலே எழுதப்படறதெல்லாம் இங்கிலீஷ் படைப்பு ஆச்சே..  ராபர்ட் ப்ரவுன், ஆர்.எல்.ஸ்டீவன்ஸன், ம்யூரியல் ஸ்பார்க் இப்படி எல்லோரும் எழுதினதெல்லாம் ஆங்கில்  இலக்கியம் தானே” என்று நான் கேட்க, அவர் உடனே “ஸ்காட்லாந்தில் இருந்து, ஸ்காட்லாந்தைப் பற்றி எந்த மொழியிலே எழுதினாலும் அது ஸ்காட்டிஷ் இலக்கியம் .. நீங்களே இங்கே இருந்து இந்த எடின்பரோ பற்றி உங்க மொழியிலே ஒரு நாவல் எழுதினா, அது ஸ்காட்டிஷ் இலக்கியம்” என்று ஒரு புதுக் கோட்பாட்டை முன்வைத்தார்.

யோசித்துப் பார்க்கும்போது, அவர் சொல்வதிலும் அர்த்தம் உண்டு என்று எனக்குத் தோன்றியது, இந்தியாவில் செப்பு மொழி இருபத்து நான்கு – ஆங்கிலமும் வடமொழியும் உட்பட.  எழுதி, வாசிக்கப்படும் மொழிகளான இவற்றில் எந்த மொழியில் எழுதினால் என்ன? இந்தியாவில்  அல்லது வெளியே இருந்து, இந்தியா பற்றி எழுதுவது எல்லாம் இந்திய இலக்கியம் தான்.

இந்திய இலக்கியத்தை ஒரே இடத்தில் படிக்க, எழுதிப் பாதுகாக்க, கூடிக் கொண்டாட ஒரு தலம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

சிவப்பு ஒயின் அதிகமாக வார்க்கப்பட்டு நாங்கள் கிட்டத்தட்ட அநுபூதி நிலையில் இருந்த அந்த வார இறுதி சாயங்கால அமர்வு நீண்டுபோக, ஹைதராபத்திலிருந்து வந்திருந்த ஒரு தெலுங்கு பேசும் நண்பர் (ஹைதராபாத் என்பதால் உருதுவும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்), சதத் ஹுசைன் மாண்டோவின் ‘கோல்தோ’ (’திற’!) என்ற உருதுச் சிறுகதை பற்றி ’இந்தியாவில் எழுதப்பட்ட உன்னதமான ஒரே கதை அது’ என்று கருத்துச் சொன்னார். நான் அப்போது கூறினேன், ‘கோல் தோ உன்னதமான ஒரு கதையாக இருக்கலாம்.. ஆனால் உன்னதமான ஒரே கதை இல்லை’.  சொல்லிவிட்டு, அந்தச் சிறுகதையின் கருவைத் தன் அமைதியும் நேர்த்தியுமான கதைப்போக்கில் ஒரு நிகழ்வாக ஆக்கி நடைபோடும் தமிழ் நாவலான அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’ பற்றிக் கூறினேன். ‘அது இந்திய நாவல். 1947-ஆம் ஆண்டு, தேசப் பிரிவினை காலத்தில் முழுக்க முழுக்க தெலுங்கும் உருதுவும் புழங்கும் ஹைதராபாத்தில் நிகழும் புதினம்’ என்று முடிக்க,  சுந்தரத் தெலுங்கரின் வியப்பு ஓயவே இல்லை.

நாம் எல்லோரும் நம் அண்டை வீடுகளில் இருக்கும் சகோதர்களோடும் நண்பர்களோடும் கலந்துரையாடிக் கலையையும், கலாசாரத்தையும், கவிதை, கதையையும் பகிர்ந்து அனுபவிக்க ஏன் நம் ஜன்னல்கள் திறக்கப்படவில்லை? கணினி யுகமான இந்நாளில் ஏன் இதுவரை யாரும் பெரிய அளவில் இந்திய மொழிகளுக்கு இடையே இணைய இலக்கியத் தொடர்புக்கு முயலவில்லை  என்ற விசாரம் என்னை அலைக்கழிக்க, நாட்கள் நீங்கின.

ஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஒரு லிபி. கம்ப்யூட்டரில் அத்தனையும் எப்படி ஏற்றி வைத்து இயக்கிப் பலமொழி இலக்கிய இணையத் தளம் அமையும் என்ற கவலைக்கு இடமின்றி, ஒருங்குகுறி என்ற யூனிகோட் எழுத்துருவம் கொண்டு எம்மொழியிலும் கணினியில் எழுதிப் படிக்கலாம் என்ற நிலமை உருவானது அப்புறம்.

இந்தத் தொழில்நுட்ப வசதியோடு, இந்திய மொழிகள் 24 – லும் ஒரு பத்திரிகை இருந்தால் ஒரே இடத்தில் அனைத்து மொழிகளிலும் எல்லாவற்றையும் படிக்கலாமே… ஒரு மொழியில் உள்ளதை அப்படியே மொழிமாற்றம் செய்து எல்லா மொழிக்காரர்களும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாமே.

என்னுடைய இந்த ஆசை நண்பர் மாலன் மூலம் நிறைவேறியது

அண்மையில் அவர் எனக்குத் தொலைபேசி, ‘www. Akshra.org’ என்று ஒரு புது இணையத்தளம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. சென்று பார்த்தீர்களா?” என்று அன்போடு விசாரித்தார். போனேன்.

Akshra.org என்ற  பெயரே மிகவும் ஈர்ப்புள்ளதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக .org என்பது சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தளம் என்பதால் என்னை வெகுவாக கவர்ந்தது.

1980-களில் எழுத்தின் அடையாளமாக ‘திசைகள்’ இருந்து வந்தது. மாலன் தலைமையிலான அந்த இதழில் பங்களித்த இளம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கட்டற்ற சுதந்திரம் கொடுத்து ஊக்கமளித்தார். கூடவே மூன்று அன்புக் கட்டளைகளுடன் ஒரு நிபந்தனையும் கொடுத்திருந்தார்… ‘எழுத்து, சாதி மதம் இனம் பார்க்காமல் பொதுவானதாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தக் கூடாது… கண்ணியமாக எழுத வேண்டும்…’ .

மற்ற படைப்பாளிகளிடம் எதிர்பார்க்கும் இந்த சுய அத்துக்களையும், பொறுப்புத் தரித்தலையும் தன் எழுத்திலும் வாழ்விலும் கடைப்பிடிக்கும் நல்ல நண்பர் அவர். தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்துக்கான ஒரு கருவியாக நேசிப்பவர்.

2018 –ல் இணையப் பத்திரிகையின் தீர்க்கமான அடையாளமாக, எல்லோருக்கும் தெரிய வேண்டிய எடுத்துக்காட்டாக மாலன் ஆரம்பித்துள்ள அக்ஷர,   வெகு விரைவில், உருவ, உள்ளடக்கச் செறிவோடு இந்தியா முழுவதும் சென்றடைந்து, வெகுவான வாசகர்களை, முக்கியமாக இளைய தலைமுறையினரைக் கவர்ந்து, அனைவருக்கும் இலக்கிய, கலாச்சார பகிர்வு – நுகர்வு அனுபவம் என்னும் பெரும்பயன் தருவதாக அமையப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அக்ஷர இணையத் தளத்தில் வெவ்வேறு மொழிகளுக்கான பக்கங்களுக்கு மாறி நூல்பிடித்துப் போக இணைப்புகள், ஒலிப் புத்தகங்கள், மொழி மாற்றப் படைப்புகளை அந்தந்த பக்கங்களிலேயே சொடுக்கித் தேர்ந்தெடுத்துப் போய்ப் படிக்கின்ற வசதி….  அற்புதமான அக்ஷர

மாலனுக்கும், அக்ஷரவுக்குக்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்

இரா. முருகன்
A techno-banker & project manager
also a Tamil,English novelist, playwright, screen writer& translator

Karthika Rajkumar

அக்ஷர குறித்து கார்த்திகா ராஜ்குமார்

எங்கள் குரு மாலன் தலைமையில் உருவாகி இருக்கும் அக்ஷர பல புது எல்லைகளையும் உச்சங்களையும் வரும் நாட்களில் தொடப்போகிறது… காரணம் 24  இந்திய மொழிகளில் வெளிவரும் ஒரே இந்தியப் மின் இதழ் என்னும் பிரமிக்க வைக்கிற கான்செப்ட்.

இந்த இமாலய பணியை தன் இயல்பான புன்னகையோடு அவர் சாதித்து காட்டுவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஏனெனில் எங்கள் குருவைப்பற்றி எங்களுக்குத் தெரியும்.

எண்பதுகளின் துவக்கத்தில் திரு .சாவி அவர்கள் திசைகள் என்று ஒரு வார இதழை இளைஞர்களுக்காக துவக்கினபொழுது நம் மாலன் தான் அதற்கு ஆசிரியர் . அதன் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. தமிழ் நாட்டின் பல திசையில் இருந்தும் நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர்கள் என்று எட்டு இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர் மாலன் தலைமையில் அமைந்த ஆசிரியர் குழுவிற்காக நானும் அந்த குழுவில்  இருக்க வாய்ப்பு கொடுத்தார் மாலன்.

இன்றைக்கு ஊடகங்களில் செயல்படுபவர்களில் பெருபாலானவர்கள்  திசைகளின் பாதிப்புகளை உடையவர்கள் தாம். அந்த  காலத்தில் அவர் முன்னெடுத்த பல புதிய முயற்சிகளை விமர்சித்தவர்கள் பலர். ஆனால், அவர் தீர்க்கதரிசியாய் சொன்ன பல விஷயங்கள் இன்று  நிஜமாகி இருப்பது அவரின் துல்லியமான கணிப்புக்கு உதாரணம். இதுபோல பல தீர்க்க தரிசனங்களை தான் பொறுப்பு எடுத்துக்கொண்ட பல ஊடக பொறுப்புகளிலும் செய்து காட்டினார்.

இப்போது அக்ஷர மூலம் புது அவதாரம். இதிலும் அவர் ஜெயித்துக் காட்டுவார். எங்கள் குருவுக்கு என் வாழ்த்துகள்.

கார்த்திகா ராஜ்குமார்
அறங்காவலர் / ஒருங்கிணைப்பாளர்
சிமிர்னா அறக்கட்டளை , உதகை

Ramanan VSV

அக்ஷர குறித்து ரமணன்…

ஆடியோவில் கேட்க… https://soundcloud.com/compcarebhu/xosblaop4th7

அக்ஷர  அறிவிப்பைப்பார்த்து அசந்துபோனேன்.

ஒரே பத்திரிகையில் பல மொழிகளின் படைப்புகளா? நினைக்கவே பிரமிப்பாகயிருக்கிறது.  எத்தனைப் படைப்பாளிகள்? எடிட்டர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?. யார் எல்லாவற்றையும் இணைப்பார்கள்?  இப்படிப் பல கேள்விகள் எனக்குள் எழுந்தது.

இதைச்செய்யப் போவது மாலன் என்று அறிந்தபோது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

தமிழின் பிரபலமான பல வார மாத இதழ்களுக்கும் தினமணிக்கும் ஆசிரியாராகயிருந்து பல்வேறு சவால்களுக்கிடையே  சிறப்பாகக் கொண்டுவந்தவர் மாலன்.

நீண்ட நாட்களுக்கு முன்னரே  தமிழின் முதல் T.V. செய்தி சானலை வெற்றிகரமாக உருவாக்கியவர்.

அதனால்  இந்தியாவின் முதல் பன்மொழி இணையப்பத்திரிகையாக இருக்கப் போகும்  இதுவும் சிறப்பாகயிருக்கும் என நினைத்து முதல் இதழுக்காகக் காத்திருந்தேன்.

என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

அக்ஷர  எந்த இந்திய மொழியிலும் அதன் அர்த்தத்தை எளிதாகப்  புரிந்துகொள்ளக்கூடிய அந்த சொல்லே என்னைக் கவர்ந்தது. முதல் இதழின்   கனமான அடக்கம் அழகான வடிவம் அதன் பின்னே இருக்கும் கடுமையான உழைப்பைச் சொல்லியது. தொடந்த வந்த இதழ்கள் மெல்ல அது தன் எல்லைகளை விவிவாக்கிகொண்டிருக்கிறது என்பதைச்சொல்லிற்று..

இந்த இதழலில் மாலனின் ஆசான் மகாகவி பாரதிக்காக.  20 மொழிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பதைப் பார்த்த போது  இந்த தேசத்தில் பாரதியை மதிப்பவர்கள் இத்தனை மொழிகளிலா? என்று மிக மகிழ்ச்சியாகியிருந்தது.  நிச்சயம் நாம் எல் லோரும்பெருமைப்பட வேண்டிய விஷயம்.  இது இதுவரை யாரும் செய்யாதது.

இந்த நல்ல முயற்சிபற்றி  அகில இந்திய அளவில் பல் மொழிகளில் சொல்லப்படவேண்டும்.. மாலனும் அவரது குழுவினரும் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார்கள் என நினைக்கிறேன்

வாழ்த்துகள் மாலன்!.

நீங்கள்  பல  முதல் முயற்சிகளில் வெற்றி கண்டு உச்சம்  தொட்டது போல  ஆசானின் ஆசியுடன்  அக்ஷர விலும்  சாதிக்க வாழ்த்துகள்!.

ரமணன் வி.எஸ்.வி
எழுத்தாளர்
http://www.chuvadugal.com/

Indhumathi

அக்ஷர குறித்து இந்துமதி…

அக்ஷர – மாலன் முயற்சியில் அற்புதமான படைப்பு. ஒரு பத்திரிகையை இந்திய மொழிகள் அத்தனையிலும் நடத்த முடியுமா என்ற ஆச்சர்யம் எனக்கு. எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட மாலன் எனக்கு நெருங்கிய நண்பர் என்பதில் கூடுதல் பெருமிதம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, போச்சுகல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா என பல நாடுகளுக்கு  அழைப்பின் பேரில் சென்று சமகால இலக்கியம், அரசியல் விஷயங்கள் குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்திய மாலன் இந்திய மொழிகள் 24 – லும் ஒரு இணைய இதழ் அதுவும் இலக்கிய இதழ் ஆரம்பித்து நடத்துவதில் ஆச்சர்யம் இல்லையே.

ஏற்கெனவே திசைகள் என்ற இணையதளத்தை வெற்றிகரமாக  நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. அது பல வருடங்களுக்கு முன்பே அச்சு இதழாக வெளியானது.

மாலனின் எல்லா புதுமையான முயற்சிகளும் வெற்றியடைய, இவரது பரந்துபட்ட பயணங்களும், பல்மொழி அறிந்திருக்கும் நுட்பமும், ஆழமான இலக்கிய அறிவும், நீண்டகால பத்திரிகை அனுபவமுமே காரணம்.

ஒரு கட்டுரையை / கட்டுரையை  குறித்த காலத்துக்குள் எழுதி பத்திரிகைக்கு அனுப்புவதே பெரிய விஷயாக இருக்கும்போது 24 மொழிகளில் ஒரு இணைய பத்திரிகையை மாதந்தோறும் குறித்த காலத்தில் வெளியிடுவது என்பது வியப்பான விஷயம்தான்.

அக்ஷர-வுக்காக என்னிடமும் படைப்புகளை வாங்கி பப்ளிஷ் செய்துள்ளார் மாலன்.

செப்டம்பர் மாத இதழில் மகாகவி பாரதிக்காகவும், தாகூருக்காகவும் 20 மொழிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பதைப் பார்த்த போது  மிகவும் பெருமிதமாக இருந்தது.

அக்ஷர – வை எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வருகிறேன்.

ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பக்கங்கள், ஏராளமான படைப்பாளிகள், தரமான படைப்புகள் என அசத்தலாக உள்ளது.

தேவையானதை தேடி எடுக்கும் வசதி கூடுதல் சிறப்பு.

என் சமகால படைப்பாளி, நண்பன் இதுபோன்ற ஒரு இணைய இதழை கொண்டுவந்ததில் பெருமைப்படுகிறேன்.

மாலனுக்கும், அக்ஷரவுக்கும் வாழ்த்துகள்…

இந்துமதி
எழுத்தாளர்

Compcare K.Bhuvaneswari

அக்ஷர குறித்து காம்கேர் கே. புவனேஸ்வரி

அக்ஷர – மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்களின் தலைமையில், வடிவமைப்பில்,  எடிட்டிங்கில்  உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும் 24 மொழிகளில் இந்திய இலக்கியத்துக்கான இணைய இதழ்.

இந்த முயற்சி என்னை ஈர்த்தமைக்கு முதல் காரணம் இதன் பெயர் – அக்ஷர.
இரண்டாவது காரணம் – 24 இந்திய மொழிகள் என்ற என்ற பிரமாண்டம்.

அக்ஷர-வின் முதல் இதழை வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக் மூலம் அறிந்தபோது ஆச்சர்யப்பட்டேன். இன்பாக்ஸில் இதை வடிவமைத்தது யார் என கேட்டேன். ‘நான் தான்… ஏன் ஏதேனும் பிழை இருக்கிறதா?’ என பதிலும் சொல்லி கேள்வியும் கேட்டிருந்தார்.

நான் வியந்தேன். காரணம். மாலன் அவர்களை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் மட்டுமே எனக்குப் பரிச்சியம்.

அக்ஷர-வுக்குப் பிறகுதான் இவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்.

ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் முதுகலைப்பட்டம் பெற்றவர் என்பதையும்…

மைக்ரோசாஃப்ட்டின் எம்.எஸ்.ஆஃபீஸ் தமிழ்ப்படுத்தப்பட்டபோது அதை சரிபார்த்து ஒப்புதல் அளித்ததோடு அவர்களுக்காக கணிச்சொல் அகராதி ஒன்றையும் தொகுத்தளித்தவர் என்பதையும்…

சமகால இலக்கியம், அரசியல் விஷயங்கள் குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியுள்ளார் என்பதையும்…

அறிந்தபோது வியப்பும் பெருமையும்.

ஒரு எழுத்தாளர், அதே துறையில் மேலைநாட்டில் முதுகலைப்பட்டம் பெற்று, தமிழ் சார்ந்த தொழில்நுட்பத்தை கால மாற்றத்துக்கு ஏற்ப அப்டேட் செய்துகொண்டு, சமகால இலக்கியத்தை சமகால தொழில்நுட்பத்துடன் இணைத்து இழைத்து அக்ஷர மூலம் கொண்டு வந்ததை அறிந்து…

வியந்து பெருமைப்பட்டதோடு நின்று விடாமல் இவரது உயரிய முயற்சியான  அக்ஷர-வை மக்களுக்கு பரவலாக்க வேண்டும் என நினைத்தேன்.

இவரைச் சார்ந்த நண்பர்கள் / உறவினர்கள் சிலரிடம் அக்ஷர குறித்து கருத்து கேட்டு சேகரித்தேன். அதில் என் கருத்துக்களையும் இணைத்தேன்.

எதேச்சையாக இவரது பிறந்தநாளும் அக்டோபர் 8 என அறிந்தேன். இதையே இவரது பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். http://www.akshra.org/category/on-akshra/

தொழில்நுட்பம் சார்ந்த தமிழுக்கு இவருடைய உயரிய பங்களிப்புக்கு தொழில்நுட்பக் களத்திலேயே / தளத்திலேயே வாழுகின்ற என்னால் ஆன சிறிய பங்களிப்பு…

இவருடைய திறமையையும், உழைப்பையும் மட்டுமில்லாமல்…
இவருடைய நேர்மையும், பண்பும், ஒழுக்கமும்…
இன்றைய இளம் தலைமுறை பத்திரிகையாளர்கள் மட்டுமில்லாமல் அனைவருமே பின்பற்ற வேண்டிய பண்புகள்.

பிறந்த நாள் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்…

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited
http://compcarebhuvaneswari.com/

Maalan

அக்ஷர – 24 மொழிகளில் ஒரு இணைய இதழ்.

akshra – Multilingual Online Journal for Indian Writing.

இந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ்.

சமகால இந்திய இலக்கியத்தை அந்தந்த மொழிகளின் வரி வடிவங்களிலேயே  வெளியிட இந்திய மொழிகள் இருபத்தி நான்கிற்கும் இடமளித்துள்ளது ‘அக்ஷர’.

ஜூன் 2018 – ல் தொடங்கப்பட்ட அக்ஷர -இணைய இதழில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் இதழ் வலையேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாத இதழ்களை சுலபமாகப் படிக்க ஒரு பொருளடக்கப் பக்கம் இணைய இணைப்புகள் (links) கொடுக்கப்பட்டுள்ளது.

மொழிவாரியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மொழியிலும் கட்டுரைகள், கவிதைகள், புனைகதைகள், நேர்காணல்கள் மற்றும் விமர்சனங்கள் (Essays, Poems, Fiction, Interviews, Reviews) என அசத்தலான ஐந்து பிரிவுகளில் விஷயங்களை வெளியிட முயற்சி நடக்கிறது.

மற்ற மொழிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக மொழிபெயர்ப்புகளை வெளியிட ஒரு பகுதி… (Translations)

முந்தைய இதழ்களைப் படிக்க ஒரு பகுதி… (Archive)

டெஸ்க்டாப், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஐபேட் என அனைத்திலும் இயங்கக்கூடியதாய் வடிவமைக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.

ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழியின் சிறந்த எழுத்தாளர்கள் / விமர்சகர்கள் (சிலர் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்கள்) அந்த மொழி ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த இணைய இதழுக்கு தரமான படைப்புகளை எந்த மொழியிலும் அனுப்பலாம். அவை யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.

அன்புடன்

மாலன்

AKSHRA
error: Content is protected !!