ஆகஸ்ட் பதினைந்து :  புதினமன்று,  இதிகாசம்

முனைவர் எச்.பாலசுப்பிரமணியம்

ஆகஸ்ட் பதினைந்து – iஇந்திய நாடு அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நன்னாள்.  பள்ளித்தலங்களிலும் அலுவலக வளாகங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றிக் கொண்டாடும் தினம்.  அதே நேரத்தில் 1920 க்கு முன்பே ‘சுதந்திரப் பயிர்’ என்ற கவிதையில்  அமரகவி சுப்பிரமணிய பாரதி பாடிய  வரிகள் நம்  நினைவிற்கு வருகின்றன – தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா!  இப்பயிரைக்  கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?  ஒராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர் வாராதது போல் வந்த மாமணியின் விலை அறியாமல், அரசியலைத் தொழிலாகக் கொண்டவர்கள் தங்கள் பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக சாதி-மதம் மற்றும்  மொழி-இன அடிப்படையில் பிரிவினை வாதத்தைக் கிளப்பி விட்டு,  நாட்டு  நலனையே பணயம் வைக்கத் தயங்காத நிலையைப் பார்க்கும் பொழுது, அறுபது ஆண்டுகளுக்கு முன்  இந்திய சுதந்திரத்திற்கு எதிராக சர்ச்சில் எழுப்பிய ஆட்சேபம் மெய்யாகி வருகிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது அல்லவா?

இத்தகைய  சூழலில் சென்னை வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணியாற்றும் குமரி எஸ். நீலகண்டனின் , ‘ஆகஸ்ட் 15 என்ற புதுமையான புதினம் வெதும்பிய உள்ளங்களுக்கு தெம்பளிக்கும் வகையில் வெளிவந்திருப்பது ஆறுதல் தரும விஷயம்  ஆசிரியர் இதனை  இணையத்தளத்தில் மலரும் வலைப்பூ மொழிநடையில் அமைத்துள்ளது புதுமையான உத்தி.

ஏறத்தாழ 500   பக்கங்கள் கொண்ட இப்புதினத்தில்   கல்யாணம் என்ற  தொண்ணூறு வயது விந்தை மனிதரும் சத்யா  என்ற பதிமூன்று வயதுச் சிறுமியும் சேர்ந்து இந்திய மக்களின் உறங்கிக் கிடக்கும் மனச்சாட்சியை உசுப்பி எழுப்பி விடுகிறார்கள்.  அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள், சீர்த்திருத்தவாதிகள் மற்றும்  சமயத் தலைவர்களால்  கூட செய்ய இயலாத புரட்சியை இவ்விருவரும் அனாயாசமாகச்  செய்து விடுகின்றனர்.

சத்தியத்தின் வாயை எவராலும் மூட  இயலாது.  அது என்றாயினும் ஒரு நாள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே தீரும் என்ற உண்மை இந்தப் படைப்பின் மூலம்  நிரூபணமாகி உள்ளது. இதைத்தான் மேலைக் கவிதை இயலார் ‘ஒரு நல்ல பிரதீ தன்னைத்தானே படைத்துக் கொள்கிறது, ஆசிரியர் அதற்கு நிமித்தம் மட்டுமே’ என்கிறார்கள்.   கண்டதும் கேட்டதும் என்ற நிகழ்ச்சியை வானொலியில் பல ஆண்டுகளாகத  தொகுத்து வந்த ஆசிரியரின் உள்ளத்தில் அவர் கண்டும் கேட்டும் வந்த நடப்புகளின் சுமை இரண்டாயிரமாம் ஆண்டிலேயே கதைக்கருவாக உருவானது..  அது புதினமாக உருப்பெற பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

முன்னர் அவனுடை நாமம் கேட்டாள்  என்ற அப்பர் பெருமானின்  பாடலுக்கு இணங்க ஆசிரியர் நீலகண்டன் 2010 ல்  ஒரு நாள்  அண்ணல் காந்தியின் தனிச் செயலராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய கல்யாணம் அவர்களின் பெயரைக் கேட்கிறார்.  பிறகு வானொலி நிகழ்ச்சியில் அவரது குரலை பதினான்கு நிமிடம் கேட்டு மெய் சிலிர்க்கிறார். அதன் பின் அவரைச் சந்தித்து நிறையப் பேசுகிறார்.  இருவரது உள்ளொளியும் உட்கலந்தபோது உருவானது ஆகஸ்ட்  பதினைந்து என்ற இந்தப் படைப்பு.

இதில் .தொண்ணூறை எட்டிய கல்யாணம்  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்த இந்திய வரலாற்றினை – அண்ணல் காந்தியின் சத்திய சோதனையை  – எந்த  வரலாற்றிலும் எழுதப்படாத  உண்மைகளை -ஒரு வரலாற்று ஆசிரியரின்  பாரபட்சமற்ற நோக்குடன் வருணிக், வருணிக்க அதன் அடுத்தடுத்த இடுகையில், இரண்டாயிரமாம் ஆண்டில்  பிறந்த பதிமூன்று வயது சத்யா இன்றைய மக்கள் பிரதிநிதிகளின்  பொய் புரட்டுப  பித்தலாட்டங்கள்,  , லஞ்சலாவண்யங்கள், இரட்டைவேடங்கள்  ஆகியவற்றை உள்ளபடியே பிட்டுப் பிட்டு வைக்கிறாள். . .

கடமை, ஒழுக்கம் மற்றும்  தியாக உணர்வுடன் வாழ்ந்த ஒரு தலைமுறையின் வரலாற்றுடன், ஊழல் கொலை கொள்ளை கற்பழிப்பு  இவையே வாழ்வின் செல்நெறியாகி விட்ட இன்றைய இந்தியாவின் வரலாற்றினை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் அமைந்த இப்படைப்பை  இதிகாசம் என்று கூறுவதே  பொருத்தமாகப் படுகிறது.

ஒரு ஆளுமை அல்லது கொள்கையை மையமாகக் கொண்டு படைக்கப் பெறும் இதிகாசம் ஒரு நாட்டினத்துக்கு – ஒரு சமூகத்துக்கு  – காலம்காலத்துக்கும் வழிகாட்டும் திறன் கொண்டது.. இராமர் காலத்தில் வாழ்ந்த வால்மீகி இராமர் கதையை உள்ளபடியே பாடியது போல காந்தி அடிகளின் மிக முக்கியமான இறுதி ஐந்தாண்டு வரலாற்றினை அண்ணலின் அந்தரங்கச் செயலராக் விளங்கிய கல்யாணம்  பதிவு செய்துள்ளதால் இது இதிகாசமே. எனது வாழ்க்கையே நான் அளிக்கும் செய்தியாகும் என்ற காந்தி அடிகளின் கூற்று அவரின் நிழலாக வாழ்ந்த, இனறும் வாழ்ந்து கொண்டிருக்கிற கல்யாணம் விஷயத்திலும் நூறு  சதவீதம் பொருந்தும்

வடக்கே சிம்லாவில் ஒரு வசதியான குடும்பத்தில் 1922 ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பிறந்து தில்லியிலும் சிம்லாவிலும் படித்து சகல வசதிகளுடனும் சுதந்திரமாக வளர்ந்த கல்யாணத்திற்கு சுதந்திரம் என்றால் என்ன?  காந்தி எதற்காக சுதந்திரம் கேட்கிறார் என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அக்கம் பக்கத்தில் வாழ்ந்த ஆங்கிலேயர்களிடம் இருந்து சின்னக் கல்யாணம் நிறைய நல்ல விஷயங்களை கற்றார்.  1942 ல் காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை ஆரம்பித்து கைதாகி புணே ஆகாகான் சிறையில் இருந்த போது  கல்யாணம் வணிகவியலில் பட்டம் பெற்று ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அப்போது தான் நிகழ்ந்தது இதிகாசத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த சம்பவம்.  யாரோ ஒரு மனிதர்  கல்யாணத்திடம் ஆகஸ்ட் புரட்சி சம்பந்தமான சில துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கக் கொடுத்த நிகழ்ச்சி, கல்யாணத்தை  உலக அரங்குக்கு இழுத்து வந்து இதிகாசம் படைக்க வைத்தது.  அந்தத் துண்டுப் பிரசுரத்தில் என்ன எழுதிஇருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்காமலேயே, அந்த மனிதர் சொன்னபடி  இரவு பத்து மணிக்குமேல்  வீட்டு வாசல்களில் சொருகிக் கொண்டிருந்த இளைஞர் கல்யாணம் போலீஸ் அதிகாரியிடம் பிடிபட்டு தேசத்துரோகக் குற்றத்திற்காக ஏழு மாதங்கள்  சிறைவாசம் அனுபவிக்கிறார்.   லாகூர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது வேலை போய்விட்டது..   மீண்டும் தில்லியில் ஒரு காப்பீட்டகத்தில்  பணி. .எவர் தூண்டுதலும் இன்றி  மாலை நேரங்களில்  தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சேவை. உடல் உழைப்பும் எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்ட இந்த இளைஞரை ஒரு பெரியவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் தேவதாஸ் காந்தியிடம் அறிமுகப்படுத்துகிறார்.  அவர் காந்தியின் மகன் என்று கூட அப்போது கல்யாணத்துக்குத் தெரியாது.

கல்யாணத்தின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட தேவதாஸ் காந்தி வர்தாவிலுள்ள காந்தி ஆச்ரமத்திற்குக் கடிதம் ;தந்து அனுப்புகிறார்.  இரண்டொரு நாட்களிலேயே ஆஸ்ரமத்தின் எளிய வாழ்க்கைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்கிறார் கல்யாணம்.  விரைவிலேயே சிறையிலிருந்து விடுதலையான காந்தியை மும்பையில் சந்திக்கிறார்.  ஆங்கிலம் இந்தி குஜாத்தி பஞ்சாபி என்று பல மொழிகள் தெரிந்த கட்டுப்பாடான இளைஞர்  கல்யாணத்தை காந்திக்குப் பிடித்து விட்டது.   பல்லாண்டுகளாக காந்தியின் தனிச் செயலராக பணியாற்றி ஆகாகான் மாளிகைச் சிறையில் மறைந்த மகாதேவ் தேசாயின் இடத்தை  இருபத்தொரு வயது;க கல்யாணம் அனாயாசமாக நிரப்பி விட்டார்.

பிறகென்ன? காந்தி அடிகளின் நிழலாக அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பயணித்து அவருடைய தேவைகளைக குறிப்பறிந்து நிறைவேற்றும்  கல்யாணத்துக்கு தூங்குவதற்குக் கூட நேரம் இருந்ததில்லை.  காந்தியின் அணுக்கத்தொண்டராக இருந்து அன்றைய காங்கிரஸ் தலைவர்களுடன் எல்லாம் பழகிய கல்யாணம் தன உதட்டை அசைத்திருந்தால் கூட சுதந்திர இந்தியாவில் பெரிய ப்தவிகளை பெற்றிருக்க முடியும்.  காந்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கல்யாணம் தன்னலமற்ற சேவையில் காந்திக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல.  சுதந்திரம் அருகாமையில் நெருங்கிக் கொண்டிருந்த அந்த நாட்களில் பிரபலங்களான தலைவர்களுக்கிடையே நடந்த போட்டி பொறாமைகளுக்கும் அவர் சாட்சியாக இருந்தார்.

குறிப்பாக காந்தியடிகள் தேசப்பிரிவினையை சற்றும் விரும்பவில்லை. பிரிவினையைத தவிர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகளை இந்து-முஸ்லிம் இரு சாராரும் புரிந்துகொண்டார்களில்லை.  அமைதி நிலவும் வரை சுதந்திரத்தை ஒத்திப்போடவும் தலைவர்களுக்குப் பொறுமை இருக்கவில்லை.   சுதந்திரத்திற்கு முதல் நாள் காந்தி சிறுபான்மையினருக்கு  ஆதரவாகப் பேசியதால்  வெகுண்ட சிலர் அண்ணலைத் தடியால் தாக்க முற்பட்டபோது கல்யாணம் காந்தி அடிகளின் மெய்க்காப்பாளராகவும் செயலாற்றி கலக்க காரர்களை சமாதானப்படுத்தினார்.

இதுவரை வெளிவராத பல உண்மைகளை கல்யாணம் தமது இடுகைகளில் பதிவு செய்துள்ளார். முக்கியமான ஒன்று, காந்தியடிகள் சுடப்பட்ட போது கல்யாணம்  அவருக்கு மிக அருகாமையிலேயே இருந்தார்.  பரவலாக எல்லாரும் நம்புவது போல குண்டடி பட்டதும் அண்ணல் ‘ஹே ராம்’ என்ற சொல்லை உச்சரிக்கவே இல்லை என்கிறார்.  எதிர்பாராத தாக்குதலினால் ஸ்தம்பித்த நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பு எங்கே இருந்தது.?  சத்தியமே உருவான அண்ணலின் வாயில் யாரோ திணித்த பொய் அது என்று கூறி வருந்துகிறார் கல்யாணம்.  அன்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நிருபரும் இதை ஆமோதிக்கிறார்.

காந்தியின் மறைவிற்குப் பிறகு  பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய கல்யாணம் சென்னை திரும்பி திருமணமாகி பேரன் பேத்திகளைக் கண்டு தமது தோட்டம் செடிகளுடன் ஏகாந்த வாசம் செய்கையில், ஒரு நாள் குழந்தை சத்யாவின் வலைப்பூவினால் ஈர்க்கப்பட்டார். சிறுமி சத்யாவின்  வலைப்பூவைப் படித்தபின் கல்யாணத்திற்கும் ஒரு வலைப்பூ தொடங்கி எழுதும் ஆர்வம் வந்தது  பேரன் விக்னேஷின் உதவியுடன் வலைப்பூ தொடங்கி அவர்  சிறுமி சத்யாவை பாராட்டினார். பரஸ்பரம் சந்தியாமலே ஒருவரை ஒருவர் நேசித்த இந்த இருவரின் இடுகைகளினால் விரிந்து விகசித்தது இப்புதினம்.  -.    ,

எட்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி சத்யா ஆசிரியர் நீலகண்டனின அற்புதமான கண்டுபிடிப்பு.  சத்யாவின் அம்மா அப்பா சரியான சண்டைக்கோழிகள்.  விவாகரத்துக்கு மனுப் போட்டு வெவ்வேறு மூலைகளில்  வசிக்கிறார்கள்.  நடுவில் அகப்பட்டுக்கொண்ட சத்யா மத்திய மந்திரியான மாமாவின் வீட்டில் தங்கிப  படிக்கிறாள்.  பணம் பதவிக்காக எந்தக் குறுக்கு வழிக்கும் அஞ்சாத ஊழல் மன்னரான மாமா தன மகனையும்  அதே வழியில் வளர்க்கிறார்.  அங்கே வேலைக்காரியாக பணியாற்றிய  தாமரை அக்காவின் அரவணைப்பு மட்டும் இல்லாதிருந்தால் சத்யா அந்த வீட்டை விட்டு என்றோ ஓடிப்போயிருப்பாள்.. தாமரை அக்காதான்  சத்யாவிற்கு தோழியாகவும், தாயாகவும் வழிகாட்டியாகவும் இருந்து அவளை புதுயுகப்பெண்ணாக வடிவமைக்கிறாள். அதனால்   பதிமூன்று வயதிலேயே மனப்பக்குவம் பெற்று சத்யா தன பெயரில்  வலைப்பூ தொடங்குகிறாள்.

பெரியவர் கல்யாணத்தின் ஊக்கம் பெற்று .தன கதையைத் தொடர்ந்து பதிவு செய்கிறாள்.  சத்யாவின் இடுகைகளில் மாமாவின் திருவிளையாடல்கள்  மூலமாக இன்றைய அரசியல்வாதிகளின் வக்கிரங்கள் தத்ரூபமாகச சித்தரிக்கப  படுகின்றன. கல்வி, சமூகம் வாழ்க்கை  ஆகியவற்றில் படிந்துள்ள மாசுகளைப  பதிவு செய்யும் சத்யா தான் கண்ட நல்லவைகளையும் கூறத்தவறுவதில்லை.. ஒரு கட்டத்தில் சில நாட்களாக சத்யாவின் வலைப்பூவில் எந்த இடுகையும் வராமையினால் கல்யாணம் சற்று கவலை அடைய, கடைசியில் அந்த நற்செய்தி வந்தது.  சத்யா எழுதியிருந்தாள் – ஒரு ரயில்விபத்தில் தப்பிய சத்யாவின் பெற்றோர் பரஸ்பரம்  அறியாமலேயே காயமடைந்தவர்களுக்கு உதவி செய்கையில் எதிர்பாராத விதமாக  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனராம்.  இதை அறிந்த  சத்யா இருவருக்கும் தனித் தனியாக கடிதம் எழுதி விவாகரத்தினை வாபஸ் பெறச செய்து விட்டாளாம்.  அடுத்த மாதம் அம்மா அப்பாவுடன் கல்யாணம் ஐயா அவர்களை சந்திக்க வருவாளாம்.  இந்த நாட்டின் மீதும் இளைய தலைமுறையின் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று முடிக்கிறாள் சத்யா.

வலைப்பூக்களின்  இறுதியில் பல வாசகர்களின் கருத்துரைகளும்  ஆங்காங்கே சில கவிதை வரிகளும் இந்த நூலுக்கு அழகூட்டுகின்றன.  கடைசியில் கல்யாணத்தின் ஆவணப் பெட்டகத்திலிருந்து காந்தி தொடர்பான  முக்கிய  கடிதங்களும் புகைப்படங்களும் சேர்க்கப் பட்டுள்ளது இந்த நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.  சத்தியத்தின் நித்தியத்தை நிலைநாட்டும் இப்புதினம் காந்தியைப் போலவே உலக மக்கள் அனைவரையும் சென்றடைய உலகமொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்

தாய்மொழி போற்றுதும் – பாரதியும் பாரதேந்துவும்

முனைவர் எச். பாலசுப்பிரமணியம்

சிலம்பை யாத்த இளங்கோ அடிகள் தெள்ளு தமிழில் பாடினார்:

                   ஞாயிறு  போற்றுதும்!  ஞாயிறு   போற்றுதும் !!

                  திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!!

                  மாமழை போற்றுதும்!   மாமழை  போற்றுதும்!!

இரண்டாயிரம் ஆண்டுகள் சென்றபின் பாரத நாட்டில் தாய்மொழிகளுக்கு நலிவு நேர்ந்தது. வடக்கிலிருந்து பாரதேந்துவும் தென்னாட்டிலிருந்து பாரதியும்  ஒரே குரலில் பாடினார்கள்:

         தாய்மொழி போற்றுதும்! தாய்மொழி போற்றுதும்!!

ஆங்கில மோகத்தினால் தாய்மொழிக்கு நேர்ந்த நலிவினைக கண்டு  இருவரும் மனம் பதைபதைத்தனர். கோபுரத்தின் மீதேறி நின்று உரக்கக் கூவுவதுபோல, பாரதேந்து வித்யா நகரமான காசித் தலத்திலிருந்து முழங்கினார்:

         நிஜ பாஷா உன்னதி அஹை ஸப் உன்னதி கோ மூல்

அனைத்து உயர்வுகளுக்கும் ஆணிவேர் தாய்மொழி ஏற்றமே

தாய்த்திருநாட்டில் பாரதியார் பாப்பாவுக்கு இதோபதேசம் செய்கிறார்:

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற எங்கள்

              தாயென்று கும்பிடடி பாப்பா

 அமிழ்தில் இனியதடி பாப்பா! நம்

            ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

  சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே; – அதைத்

              தொழுது படித்திடடி பாப்பா!

இன்றைக்குச் சரியாக நூறு வருடங்களுக்கு முன் தமிழநாட்டுப் பாப்பாவுக்கு பாரதி போதித்த அமுத வரிகள்!  இன்று எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளுக்கு இந்த வரிகளை உள்ளபடியே போதித்துத் தமிழமுதம் பருகச் செய்கிறார்கள்?  மூன்று வயதிலிருந்தே அல்லவா தம் பிஞ்சுகளை போட்டிச் சந்தையில் மாட்டி வதைக்கிறார்கள்.  பசுவைக்காட்டி ‘கௌ’ ‘கௌ’ என்று அதன் பிஞ்சுமண்டையில் புகுத்துகிறார்கள்.  பெற்ற தாயை ‘மம்மி’யாக்குகிறார்கள். தாய்மொழியில் ஒரு அட்சரம் கூடப் பயிலாமல் பி.ஏ. பட்டம் பெறும் விந்தை இந்தப் பாரத நாட்டில் மட்டும் தான் நிகழ்கிறது.

ஏன் பயில வேண்டும் தாய்மொழி? கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஏன் தாய்மொழியில் பயிற்ற வேண்டும்?  .

மொழியும் பண்பாடும் ஒன்றை விட்டொன்றைப் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன என்கிறார் ராபர்ட் லாடோ ‘லிங்க்விஸ்டிக்ஸ் அக்ராஸ் கல்ச்சர்’ என்ற தமது நூலில்.  அதாவது ஒரு மொழியைக் கற்கும்போது அதன் கலாச்சாரமும் மாணவனின் உணர்வில் படிந்து விடுகிறது. எடுத்துக் காட்டாக, தில்லியில் புகழ் வாய்ந்ததோர் பப்ளிக் ஸ்கூலில் மூன்றாவது வகுப்பில் படிக்கும் தமிழ்ச் சிறுவனிடம் வள்ளுவர் பெயரைக் கூறியபோது ‘வள்ளுவரா? …யார் அவர்?’ என்று கேட்டான்.  பள்ளியில் நர்சரியிலிருந்தே ஆங்கில மீடியம், போதாக்குறைக்கு பிரெஞ்சும் பயில்கிறான்.  அந்த நாட்டின்  சூழல்,. பறவைகள், கவிஞர்கள் பெயர்கள் எல்லாம் தெரியும்.  அவ்வையார்-ஆத்திசூடி, வள்ளுவர்-குறள் பற்றி அறவே தெரியாது அச்சிறுவனுக்கு. . இது தான் இன்றைய நிலை, இளைய தலைமுறை மீது  நமக்குள்ள அக்கறை இது தான்.

மொழிகள் கற்பதில் தவறில்லை, பிற சமூகங்களின் பண்பாட்டைப புரிந்து கொள்வதும் அவர்களுடன் கலந்துறவாடுவதும் நன்றே. ஆனால், தாய்ப்பாலுடன் பெற்ற மொழியில் போதிய  அறிவு பெறாமல், பிறமொழியில் பல கலைகள் பயின்றாலும் அவர் பல கற்றும் கற்றிலாரே என்கின்றனர் பாரதியும் பாரதேந்துவும். . சிறுவயதிலேயே அந்நிய மொழியை முதல் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஏற்றுக்கொள்வது தம் கால்களைத் தாமே கோடரியால் தறித்துக் கொள்வதற்கொப்பாகும். அவ்வாறு தறிக்கப்பட்ட கால்கள் ஒருநாளும் தாய்மண்ணில் ஒட்டா. கல்விப்பயிற்சிகளை முடித்தபின் அந்த மொழி பயிலும் நாடுகளுக்குத் தொண்டு புரிய ஓடிவிடும். நம் நாட்டில் நிகழ்ந்து வரும் இந்த அவலக் கூத்தினை நாள்தோறும் கண்கூடாகப் பார்த்தும்  அதே தவற்றைத்  தவறாமல் செய்து வருகிறோம்.

தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை நம் மூத்த தலைவர்கள் அறியாமல் இல்லை.  மகாத்மா காந்தி, வினோபா, ஜெ.சி.குமரப்பா, காமராஜர், அவினாசிலிங்கம் செட்டியார் போன்ற தலைவர்கள் இருபதாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து, இதற்கென இயன்றவரை முயன்று, மறைந்து போயினர்.

‘ஹரிஜன்’ (9.7.1938) இதழில்  காந்தியடிகள் தம் அனுபவத்தைக் கூறுகிறார்: “பன்னிரண்டு வயதில் நான் குஜராத்தி மொழியில் கணிதம், சரித்திரம், பூகோளப் பாடங்களை ஓரளவு கற்றிருந்தேன். உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த முதல் மூன்று  ஆண்டுகள் ஆங்கிலம் தவிர பிற பாடங்கள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. பின்னர் ஆங்கில மீடியம் தொடங்கியதும் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்று தவித்தேன்.  ஜியாமிட்ரியை ஆங்கிலத்தில் கற்பித்தபோது தலை சுற்றியது.  ஆசிரியர்கள் ஆங்கிலத்தை எங்கள்  தலையில் புகுத்துவதிலேயே முனைப்பாக இருந்தனர்.  நான்கு ஆண்டுகளில்  ஆங்கில மீடியத்தில் நான் எந்த அளவு  ஆல்ஜிப்ரா, ஜியாமிட்ரி, ஜாகரபி கற்றேனோ அதனை குஜராத்தி மூலமாக ஒரே ஆண்டில் கற்றிருக்க முடியும். பிறகு அந்த அறிவை நாட்டு மக்களின் சேவைக்குப் பயன்படுத்தவும் இயலும்.  தாய்மொழி வழியாக விஷயங்களைக் கிரகிப்பது எளிதாகவும் தெளிவாகவும் இருக்கும். குஜராத்தி மொழியில் என் ஆளுமையும் விருத்தி அடைந்திருக்கும். இது மட்டுமல்ல,  என் ஆங்கில அறிவு எனக்கும் ஆங்கிலம்  புரியாத என் குடும்பத்தினருக்கும் இடையில் தடை ஏற்படுத்தியது. என் நடையுடை பாவனைகளில் மாற்றம் ஏற்பட்டது. இது எனக்கு மட்டும் நேர்ந்த தனி அனுபவம் அல்ல.  பெரும்பாலானவர்களின் அனுபவம் இது தான்.”

‘யங் இண்டியா’ இதழில் காந்திஜி  எழுதுகிறார் – ‘கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை ஆங்கில மீடியத்தில் பயில்வதன் விளைவு பற்றி புனே நகரில் பேராசிரியர்களுடன் பேசுகையில், அவர்கள் இதனால் ஒவ்வொரு மாணவனுடையவும் ஆறு ஆண்டுகள் வீணாகின்றன என்று தெரிவித்தனர்.  பள்ளிகளின் எண்ணிக்கையை ஆயிரமாயிரம்  மாணவர் எண்ணிக்கையுடன் பெருக்கி  எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வீணாயின என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.’(Speeches and Writings of Mahatma Gandhi, p. 318-320) என்கிறார். உண்மை என்னவெனில் இவ்வாறு பிற மொழி மூலம் கற்கும் அறிவும் அரைகுறையானதே.

பாரதி  தம் ‘சுயசரிதையில் கூறுவதும் இதுவே தான். :

        கணிதம் பன்னிரெண் டாண்டு பயில்வர், பின்

            கார்கொள் வானிலோர் மீநிலை தேர்ந்திலார்;

அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்

            ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்,

இதோடு நிற்கவில்லை. இதனால் விளையும் தீமையையும் எடுத்துரைக்கின்றார்:  –

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்,

            காளி தாசன் கவிதை புனைந்ததும்,

         உம்பர் வானத்துக கோளையும் மீனையும்

            ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்

         சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,

             தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,

         பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

             பார ளித்துத  தர்மம் வளர்த்ததும்

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து

              ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்    (பாரதியார், சுயசரிதை ).

என்றுரைக்கும் பாரதி தமது அனுபவக்கதையைச் உரைக்கின்றார் – சூதும் வாதும் அறியாத  தந்தை மகனின் நலம் நாடி நெல்லை உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலக்கல்வி கற்க அனுப்ப, ஆங்கு பெற்ற துயரை பாரதி மனக் குமுறி அறைகின்றார் –

         பொழுதெ  லாமுங்கள் பாடத்தில் போக்கி நான்

மெய்யயர்ந்து விழிகுழி வெய்திட

             வீறிழந்தென துள்ளநொய் தாகிட

        ஐயம் விஞ்சிச சுதந்திர நீங்கி யென்

              அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால்

         செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது

              தீதெ னக்குப் பல்லாயிரஞ் சேரந்தன

          நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை

               நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்.    (பாரதியார், சுயசரிதை)

பாரதிக்கும் பாரதேந்துவுக்கும் இடையே வியத்தகு ஒற்றுமைகள் உண்டு. இருவரும் தத்தம் மொழி இலக்கிய வரலாற்றில் நவீன யுகத்தின் முன்னோடிகளாக விளங்கினர். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த  இருவரும் தாய்நாட்டையே பெற்ற தாயெனப் போற்றினர். தாய்மொழியை உயிரினும் மேலாக நேசித்தனர். நடுவயதினை எட்டு முன்பே அமரராகி விட்ட பாரதியும் பாரதேந்துவும் எந்தவொரு படைப்பாளியும்  தம் முழு ஆயுளில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு  இலக்கிய சாதனை புரிந்துள்ளனர். இவ்விருவர் வாழ்ந்த காலமும் சூழலும் மட்டுமே வேறுபடுகின்றன. பாரதேந்து வாழ்ந்தது  வெற்றி பெறாத முதல் சுதந்திரப் போரைத் தொடர்ந்து பிரிட்டனின் நேரடி ஆட்சி துவங்கி, அடக்குமுறை உக்கிரமாக இருந்த காலத்தில். . ஆங்கிலம் கற்ற மேல்தட்டு மக்கள் நடை உடை பாவனைகளில் ஆங்கிலேயரைப் போலவே செயல்பட்டு ஏழை எளிய மக்களை அடக்குவதில் அரசுக்கு ஒத்தாசையாக இருந்தனர். பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்தகைய சூழலில் பாரதேந்து தனியொருவராகவே மக்கள் மனத்தில் தேசிய உணர்வினையும்   தாய்மொழிப் பற்றையும் வளர்க்கப் பாடுபட்டார். ஆங்கிலேயரைப் புகழ்வது போலவே தொடங்கி மறைமுகமாகத் தாக்க வேண்டிய நிலை. இதற்காக அவர் நாடகங்களைப் பயன்படுத்தினார்.

அங்கரேஜ் ராஜ் ஸுக ஸாஜ ஸஜே ஸப் பாரீ 

ஆங்கில ஆட்சியில் நாம் சகலவித சுகங்களும் பெற்று வாழ்கிறோம் என்று கூறி அடுத்த அடியிலே வேதனை தொனிக்கப் பாடுகிறார் –

        பை தன் விதேஷ் சலி ஜாத் இஹை அதி க்வாரீ

ஆனால் நம் செல்வமெல்லாம் அயல்நாடு செல்கிறதே இதுவே பெரும் கவலை என்கிறார்.

நாட்டின் நலிவுகளுக்கெல்லாம் மூல காரணம் தாய்மொழி அறிவு இன்மையே என்பதை நன்குணர்ந்த பாரதேந்து அடிமை மோகத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களை எழுப்புகிறார்:

        நிஜ பாஷா உன்னதி அஹை ஸப் உன்னதி கோ மூல்

        அனைத்து உயர்வுகளின் ஆணிவேர் தாய்மொழி ஏற்றமே

        அங்க்ரேஜீ படி கே ஜதபி ஸப் குன் ஹோத் ப்ரவீன்

         பை நிஜ பாஷா ஞான் பின் ரஹத் ஹீன் கே ஹீன்

         ஆங்கிலம் பயின்று   மேன்மை பல பெற்றிடினும்

         சொந்த மொழி   கல்லாதார்   ஈனரினும்  ஈனரே

         படோ லிககோ கோஉ லாக் வித பாஷா பஹுத் ப்ரகார்

         பை ஜப ஹீ கச்சு ஸோச்சிஹோ நிஜ பாஷா அனுஸார்

         பயிலுங்கள் பல்மொழிகள் வித விதமாய்

         எனின் சிந்தியுங்கள் சொந்த மொழியில் மட்டுமே

         லகஹு ந அங்க்ரேஜ்  கரோ உன்னதி பாஷா மாஹி

         ஸப் வித்யா கே  க்ரந்த்  அங்க்ரேஜின் மாஹி லகாஹி

         காணீர் வெள்ளையரை ஏற்றம் பெறுவீர் சொந்த மொழியில்

          கொணர்நதனர் அவர் தம்மொழியில் சகல அறிவுச்செல்வம்

உண்மை தான். உலகில் எந்த மொழியிலும் ஒரு நல்ல நூல் வெளிவந்தால் ஒரே மாதத்தில் எளிய மொழிநடையில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தயாராகி விடுகிறது. எனவே தான் பாரதேந்துவும் பாரதியும் ஒரே குரலில் பேசுகிறார்கள்:

         விவித கலா சிக்ஷா  அமித் ஞான் அனேக் ப்ரகார்

         ஸப் தேஸன் சே லை  கரஹு பாஷா மாஹி ப்ரசார்

      சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

           செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

இதை இன்னும் விளக்கமாகக் கூறுகிறார் பாரதி –

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

         தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.

தாய்மொழி வளர்ப்பில் பாரதியின் பங்களிப்பு கணிசமானது.  நிறுவனமாகச் செய்ய வேண்டிய பணியை பாரதி தனியொரு மனிதராகவே செய்தார்.  ‘வாழிய செந்தமிழ்’ என்று பாடியதோடு நில்லாமல், செந்தமிழ் செழித்து ஓங்கி மக்கள் நாவில்  தவழவும் தாமே வழிகாட்டியாக நின்றார்.‘இயன்றவரை தமிழே பேசுவேன்; தமிழே எழுதுவேன்; சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட பாரதி வாழ்நாள் முழுதும் அதன்படியே ஒழுகினார்.

‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!’ என்று பாடிய பாரதி நமக்கு  தாய்மொழியின் ஆற்றலை எடுத்துரைக்கிறார்.  ‘வானம் அளந்தது  அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ என்கிறார்.  இன்றும்   வானம் அளந்ததனைத்தையும்  அறிந்து அது மேன்மேலும்  வளர வேண்டுமானால் தமிழர்கள் அதனை அனைத்துத் துறையிலும் பயன்படுத்த வேண்டும்.

பாரதி  யார்  என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார் –   “பாரதி செந்தமிழ்த் தேனீ   –  சிந்துக்குத் தந்தை – கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு – மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் – சாதிப் படைக்கு மருந்து – தமிழைச் செழிக்கச் செய்தான், தமிழால் தகுதி பெற்றான்.”  நாமும் தமிழைச்செழிக்கச் செய்வோம்! தமிழால் தகுதி பெறுவோம்!

முழுக்கைகள்

சுப்ரபாரதிமணியன்

காலை வானம் வெளிறிப் போயிருந்தது. நிலவு எங்கோ சென்று தொலைந்து போய்விட்டிருந்தது. மேகங்களின் கூட்டணி ராட்சத உருவங்களைக் கலைத்துப் போட்டுப் போனது. இப்படி காலை நேரத்து வானத்தை வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது முத்து லட்சுமிக்கு.புறாக்கூண்டை விட்டு ரெண்டு நாள்  விடுமுறை என்று பெனாசிர்  சொல்லியிருந்தாள்.  புறாக்கூண்டு இப்படி நெருக்கமாக இருக்குமா. அலைந்து திரிய  இடமில்லாமல் போய் விடலாம். ஆனால் நின்று கொண்டுத் தூங்குவதற்கு இடம் கிடைத்து விடும். புறாகூண்டு வீடு என்பதற்கு பதிலாக லைன் வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று முத்துலட்சுமி நினைப்பாள்.

பெனாசிர் ஊருக்குப் போகிறாள். காலைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பதால் கிளம்பிவிட்டாள். பனிரண்டு மணி நேரப் பயணம். அவசரமாய் வரச் சொல்லி தகவல் வந்திருந்தது. சின்ன  சீட்டு ஒன்று எடுத்த பணமும் பெனாசீர் கைவசம் இருந்தது.

“என்னமோ ரகசியம் மாதிரி வா. வான்னு கூப்புடறாங்க. அப்பா, அம்மா யாராச்சுக்கும் உடம்பு செரியில்லாமப் போயிருக்கும்.”

“இல்லே வேற விசேசம்ன்னு இருக்கலாமில்லே”

“அப்பிடி ஒன்றும் தெரியலெ”

“ஊருக்குப் போன தெரிஞ்சிடப் போகுது”

 

ரேஷன் கடைக்குப் போய் அவமானப்பட்டதைப் பற்றி சற்று உரக்கவே பேசி சண்டை இட வேண்டும் என்று நினைத்திருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் இரவில் தாமதமாக  வந்த அவள் ஊருக்குப் போகவிருப்பதைச் சொன்னபின் அதைப்பற்றி விரிவாய் பேசவில்லை.ரேஷன் கடையில் பார்வையில் பட்ட அந்த இளைஞனை அவனின் புது உடையை முன்னிட்டு வெறித்துப் பார்த்திருக்கக் கூடாது என்று பட்டது. முத்து லட்சுமிக்கு, அவன் ஜீன்ஸ் கீழ் உடையில் கிழிசல்கள் இருந்தன. சட்டையிலும் ஓட்டைகள் இருந்தன. காதில் கடுக்கன் போட்டிருந்தான். தலையில் இருந்த கறுத்த மயிர்களைப் பிரித்தெடுத்தமாதிரி பிரவுன் வர்ணம் போடப்பட்டிருந்தது.

“உங்களுக்குன்னு தனி க்யூ இல்லே”

“தெரியும்”

“உங்களுக்குன்னு தனி இரண்டாவது கியூ இல்லெ”

“தெரியும்னேன்”

“அது…. ஊனம் சார்ந்த கியூ”

“அதுவும் தெரியும்ன்னேன்”

“புரிஞ்சுகிட்டா சரி”

“செரி போ”

“ரேசன் கார்டுலெ இன்னொரு சீட் ஒட்ட வந்திருக்கீங்க, உங்க கையிலயும் இன்னொன்னே ஒட்டிக்கலாம்”

“பேச்சு எல்லை மீறுது”

“யோசனையாத்தா சொன்னேன்”

“என்ன யோசனை”

“ யோசிக்கறதுதா “

“செயற்கை கை வெச்சுக்கிறது”

“செரிப்பட்டு வருமா தெரியலே”

“ஒரு கையோட வாழ்க்கை முழுக்க இருக்க முடியுமா, ஒரு கை ஓசை ஆகுமா”

“எல்லாம்  செரிதா, ரெண்டு கை வெச்சிட்டுப் பண்றதை ஒரு கையில் பண்ணிக்க வேண்டியதுதா”

“ரொம்பவும் சரியான்னு தோணலே”

“ஏதோ க்யூ வரிசையில நிற்கிறோம். முன்னால நிக்கிறீங்கன்னு நீங்க சொல்றத கேட்டுக்க வேண்டியிருக்கு”

“யாராச்சும் சொல்ல வேண்டியெதெ நான் சொல்றன்”

“அதுக்காக எது வேண்ணாலும்  சொல்ல்லாமா,,,”

“பட்டதைச் சொன்னேன்”

“பரவாயில்லெ”

அதற்குள் வரிசை நகர்ந்து ரேசன் கடைக்காரர் முன் வந்து நிறுத்திவிட்டது.பக்கத்தில் இருப்பவர் நீள மஞ்சள் அட்டையை வைத்திருந்தார்.சில வெள்ளை அட்டைகளும் தென்பட்டன. சர்க்கரைக்கென்று தனி அட்டை இருக்குமா. அட்டை என்று எதிலும் பேர் இல்லை. அப்பா பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த்து இப்போது நீக்கப்ப்பட்டிருக்கலாம்.உள் தாள்கள் எல்லாவற்றிலும் ஏகதேசம் துருத்திக் கொண்டிருந்தன.

“என்ன கார்டுலெ ஆம்பள பேர் இருக்குது”

“ஆமாங்க”

“நீங்க ஆம்பளையா”

“வீட்டு ஓனர் கார்டு”

“பொம்பளைதானே நீங்க”

“செரி…. இதுக்கு ஆராய்ச்சி வேணுமா”

“நீங்க நிக்கிறதப் பாத்தா ஆராய்ச்சி பண்ணனும்னு தோனுது”

“என்னன்னு”

“திருநங்கையோன்னு”

“அய்யோ போதும்”

“செரிம்மா, எதுக்கு அனாவசியப் பேச்சு, வீட்டுக்காரரை வரச் சொல்லு”

“அதுதா ”

“வீட்டு ஓனரை”

“வரச் சொல்றன்”

வீட்டு சொந்தக்கார்ர் சென்னப்பன் மீது எரிச்சலும் கோபமும் வந்தது. முன்னால் நின்று கேள்வி கேட்டவனின் மேல் எரிச்சலும் கோபமும் வந்தது. தன்னை எங்கோ  கொண்டு போய் தள்ளிவிட்ட பெனாசிர் மீது கோபம் வந்தது. வேலையில்லாமல் சும்மா இருப்பவள் என்று எங்காவது துரத்தி விடுகிறார்கள்.

“ஒண்ணு கேக்கறம்ன்னு தப்பா நெனைக்காதீங்க அக்கா”

“செரி சொல்லு. எங்க குடும்பத்தைப் பத்திக் கேக்காதே”

“என்னைப் பத்திதா அக்கா”

“உங்க வீட்டுக்கு வந்து தங்கினன், என்னை மில்லுக்கு அனுப்பனும்னு உங்களுக்கு எப்பிடித் தோணிச்சு”

“என்னோட பனியன் கம்பனிக்குக் கூட்டிட்டுப் போலாமுன்னுதா நெனச்சன். அவங்க மொதல்ல கூட்டற பொறுக்கற வேலைதா குடுப்பாங்க. செக்கிங்ன்னு வர்றதுக்கு மாசக் கணக்காயிடும். என்ன செய்யறதுன்னு பசீர்கிட்ட கேட்டன். நம்ம ஒத்த லைன்ல ஆறாவது வீட்லெ இருக்கறவர், அவர் மில் புரோக்கர்,  ஸ்டீபன்னு ஒருத்தர்கிட்ட வேண்ணா சொல்றன்னார்”

“இல்லே, நீங்களே புரோக்கர்ன்னு திடீர்ன்னு சந்தேகம் வந்துச்சு”

“நான் புரோக்கரா இருந்தா எதுக்கு பனியன் கம்பனியில கெடக்குறன். அந்த வருமானமே போதுமே. ஆனா சங்கடமால்லே இருக்கும்  ”

“புரோக்கர் ஆக ஆசையா”

“வேண்டா, எங்க, என்ன நடக்குமோ, அது பின்னே என் தலைமேல வந்து விழுந்திரும். புரோக்கர் வேலை பண்றதெக்கல்லாம் மன தைரியம் வேணும், பொய்யும் சுலபமா சொல்லணும், அல்லா குடுத்த இந்த வகை நிம்மதி போதும். ஆயிரம் ரூபா கெடைக்குதுன்னு யாரை எங்க தள்ளறம்னு வெவஸ்தையில்லாமத் தள்ளிருவாங்க. பாவம் எங்கெங்கையோ போய்ச் சேரும்.”

“என்னமோ ஒரு சந்தேகம் வந்துச்சக்கா”

“நிவர்த்தி பண்ணிட்டையே, நல்லதுதா”

ஆனாலும் பெனாசீர் மீது ஏன் கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தெரிந்த முகத்தின் மீதே காறித் துப்ப முடியும். தெரிந்தவர்கள் மீதே எரிச்சல் வருகிறதா, இந்த எரிச்சலை அவள் புரிந்து கொண்டால் என்ன நடக்கும். இனி யாருக்கும் உதவி செய்ய வேண்டாம் என்ற தீர்மானம் வரும்.

 

இரவே முத்து லட்சுமி புளிச்சாதம் தயார் செய்திருந்தாள். காலை முழிப்பில் அவசரமாய் எழுந்து தேங்காய் சாதமும் செய்துவிட்டாள்.சாதங்களின் மணங்களில் அறை கமகமத்துக் கொண்டிருந்தௌ. பட்டினியும், போதாத சோறும் கிடைக்கிற இடத்தில்தான் இந்த அபூர்வ மணம் தெரிய வரும்.

“புளிச் சோறு ஊருல இருக்கறவங்களுக்கும் சேத்து செஞ்சிருக்கே போல”

புளிச் சோறின் மணம்  கமகமவென அறை முழுக்க நிரம்பி இருந்தது.  கொஞ்சம் வேர்க்கடலையைச் சேர்த்து கலவையாக்கியிருந்தாள். அது வானத்து வெளிறிய நட்சத்திரங்கள் போல் மின்னின.

“ஒரு வா சாப்புடு அக்கா”

பெனாசீர் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு முன்பு ஒரு சிறு வெங்காயம், ஒரு துண்டு நெல்லிக்காய், பனை வெல்லம் ஒரு துண்டு என்று சாப்பிடுவாள். யாரோ சொல்லி  வைத்திருக்கிறார்கள். புளிப்பு, இனிப்பு வெங்காயம் என்று ஒவ்வொரு  வேளைக்கு முன்பும் சாப்பிட்டு வழக்கமான சாப்பாட்டிற்குப் போனால் அதுவே உடம்பிற்கு எதிர்ப்புச் சக்தி தரும் என்று. அதைத் தவறாமல் கடைபிடிப்பாள்.

“இந்த சாக்கடை ஊர்ல கொஞ்சம் நோய் இல்லாமெ வாழறதுதா பெரிய போனஸ்”

மில்லில் வேலை செய்கிறவர்களுக்கு மில் நிர்வாகமே வெல்லம் தரும். வாயுள் போகும் பஞ்சு கரைந்து போகப் பனைவெல்லம் நல்ல மருந்து என்று கேள்விப்பட்டிருக்கிறாள். முத்துலட்சுமி சுமங்கலித் திட்டத்தில் வேலை செய்த மில்லில்  அதெல்லாம் தரவில்லை. முகமூடி போன்று தந்தார்கள். மூக்கை மூடிக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டால் மூச்சுத் திணறுவது போல் இருக்கும்.

 

அது நாலு நாளில் நாற்றமடிக்கும் என்று பலர் அணிந்து கொள்வதில்லை. பெனாசீர் செய்வதைப் போன்று தானும் செய்ய நினைப்பாள். “நெல்லிக்காய் கெடைக்கும். இதை நம்ம லைன் வீட்ல இருந்த ஒருத்தர் சொன்னார். அவர் நெல்லிக்காய்க்குப் பதிலா  சின்ன தேங்காய்த் துண்டு சாப்பிடுவார். ஒடம்பை ஜாக்கிரதையா வெச்சிட்டா மரியாதையா இருக்கும்.”

மாலை நேரத்தில் லைன் வீட்டுப் பெண்கள் கோலம் போட வாசலில் இருப்பார்கள். மற்றபடி தொலைக்காட்சியைப் பார்த்தபடி வீட்டினுள்ளேயே கிடந்தார்கள். கணவர்களை வரவேற்க யாரும் வீட்டு வாசலில் வந்து உட்காருவதில்லை.

“இது பெரிய ஆபீஸ் வேலையா என்ன. கரெக்டானா டைமுக்கு வந்து போறதுக்கு. எப்ப வேண்ணா வருவாங்க. போவாங்க. பனியன் கம்பெனி வேலை அப்படி”

ஐந்தாம் வீட்டு கோபண்ணன் வீட்டில் இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாது. இரவில் தாறுமாறான நேரத்தில் வருவார். வரும்போதே தள்ளாடின போதையில் இருப்பார். தள்ளாடாமல் அவர் வந்த நாளை எண்னி விடலாம் என்று அவன் மனைவியும் சொல்லியிருக்கிறாள்.

கதவு அடைத்தால் அவ்வளவுதான். யாரும் திறக்கமாட்டார்கள். காலையில் சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினால் இரவுதான் வருவார். பெரும்பாலும் எல்லா வீட்டு ஆண்களும் இங்கு இப்படித்தான் என்று பெனாசீர் சொல்லியிருக்கிறாள்.

“வெந்ததைத் தின்னு விதி வந்தா செத்தும் போறதுக்கு உதாரணம் இந்த காம்பவுண்ட் ஜனங்க. இந்த ஒத்த வீட்டு ஜனங்க ”

“தீபாவளிக்குன்னு வந்து ஒண்ணா பட்டாசு வெடிப்பாங்களா”

“எல்லாருமே வெளியூர்க்காரங்க. தீபாவளி வந்தா மூணு நாள் முந்தியே ஊருக்குப் போற அவசரத்திலேயே இருப்பாங்க. திருவண்ணாமலை தீபம் வர்றப்போ தீபாவளியை நெனச்சிட்டுப் பட்டாசு வெடிச்சுக்குவாங்க. இப்பதா வெளியூர்க்காரங்கன்னா ஆந்திரா, கேரளம்ன்னு இல்லாமெ, நேபாள், ஒரிசா, பெங்கால்காரங்கன்னு ஆகிப்போச்சே”

“யார் யாருக்கு வாடகைக்குத் தர்ரதுன்னு எல்லையே கெடையாது. யார் வந்து கேட்டாலும், அட்வான்ஸ் குடுக்கத் தயாராக இருந்தால் வீடு கெடச்சிடும். வர்றவங்க எப்பிடி இருந்தாலும் செரி”

வீட்டுக்காரர் தென்னம்பாளையத்தில் இருந்தார். வாடகை முதல் வார ஞாயிறில் வசூலிக்க வருவார். இல்லாவிட்டால் இரண்டாம் வீட்டில் இருக்கும் கோவிந்த் வாங்கி வைத்துக் கொள்வார். இருக்கும் மூன்று கழிவறைகள், மூன்று குளியலறைகளைப் பயன்படுத்துவதில் சிரமங்களோ, பிரச்சினைகளோ இருந்தால் சென்னப்பனே பார்த்துக் கொள்வார். சாக்கடை அடைத்துவிட்டது, தண்ணீர் போகவில்லை இரண்டு நல்ல தண்ணீர் குழாய் தண்ணீரைப் பிரித்துக் கொள்வதில் எல்லாவற்றுக்கும் ஒரு நாயகமாக சென்னப்பன் இருப்பார். இது சம்பந்தமாய் அவர் மனைவியிடம் ஆலோசனை சொல்வார். அதை மட்டும் கன்னடத்தில் சொல்வார்.அப்போது கன்னடம் அதிகாரத்தில் வந்து நிற்கும்.

லைன் வீடுகளில் நடக்கும் சிரமங்கள் பற்றி அவர் நேரம் கிடைக்கையில் சொல்வார். பத்மாவதிபுரம் லைன் வீட்டொன்றில் ஒருவன் புதிதாக குடி வந்திருக்கிறான். அவன் சாயப்பட்டறையில் வேலை செய்யும் சக தொழிலாளயின்  மனைவியைக் கூட்டி வந்து குடித்தனம் நடத்தி இருக்கிறான். ஒரு நாள் பழைய கணவன் சாயப்பட்டறை அமில பாட்டிலுடன் வந்து வீசி ஊற்றியிருக்கிறான். ஆணின் உடை போடாத இடமெல்லாம் வெந்துவிட்டன. முகம் கொப்பளித்துவிட்டது. ஆடை மூடின பகுதிகள் ஒட்டிக் கொண்டுவிட்டன. முப்பது சதவீதம் தீக்காயம்  போலாகிவிட்டது. லைன் வீட்டிலேயே இது நடந்ததால் பெரும் பிரச்சினையாகி காவல்துறையினர் வந்து சிரமப்படுத்தியிருக்கிறார்கள்.

“இங்க எல்லாரும் குடிகாரப் பயல்களா இருக்கிறதுனாலே குடிச்சிட்டு பிளாட் ஆகிறதுக்கே நேரம் இல்லாம இருக்கு. இது சௌகரியந்தா”

“என்னங்க சௌக்கியம், குடிச்சிட்டு கெடக்கிறதா”

“இல்லீன்னா ஊர் வம்பை வெலைக்கு வாங்குவாங்க. யார் பின்னாலேயாச்சும் திரிஞ்சு பிரச்சினையில மாட்டிக்குவாங்க”

அப்படிக் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட நேபாளிகள் இருவரைப் பற்றி சென்னப்பன் பெனாசிரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்” சாயப்பட்டறையில் அந்த நேபாளிகளுக்கு வேலை. ரெண்டு பேரும் சின்ன வயது. குடி மயக்கத்தில் என்ன பண்றாங்கன்னு தெரியாமெ கம்பரசர் காத்து டியூப்பை எடுத்து ஒருத்தன் இன்னொருத்தன் ஆசன வாயில் வெச்சிட்டான். அவன் வயிறு உப்பி வெடிச்சு செத்துப் போயிட்டான். ஏழு வருசம் ஜெயில். நாலு பேர் வாழ்க்கை போச்சு”

“ரெண்டு பேர்தானே”

“ஆமா, செத்துப்  போனவன் ஒருத்தன். காத்து பைப் வைச்சவன் ஒருத்தன். அவனுகளுக்கு பொண்டாட்டின்னு ரெண்டு பேரும் இருக்காங்கில்லயா, அதுதா நாலு பேரு”

பேருந்து நிறுத்தம் வரை கூட வருவதாய் கிளம்பினாள் முத்துலட்சுமி.எதிலும் அவசரமில்லாத பொழுதுதான் அங்கும் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

“சாப்பாட்டுப் பைன்னு ஒண்ணு தனியா இருக்கேக்கா”

“வீட்லே சமையலுக்குன்னு நீ வந்தப்துபுறம் சாப்பாடு கொஞ்சம் அதிகமாய் போச்சு.  ரெண்டு வாய் அதிகமா எறங்குது. ருசியா வெவ்வேறயா சமச்சும் போடற, இன்னிக்கு மட்டன் எடுக்கிறா வேற சொன்னேன்”

“வந்தப்புறம் எடுத்தர்லாம். காடை கெடச்சாலும் செரி”

சண்டே மார்க்கெட் என்று புதியதாய் ஒன்று கிளம்பியிருந்தது. அங்கு சிக்கன் வாங்கப் போன முத்து லட்சுமிக்கு ஒரு புதுத் தகவல் கிடைத்தது. ஜனதா சிக்கன் என்று ஒரு வகை சண்டே மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறந்தது. ஒரியாக்காரர்கள் அதில் ஜனதா சிக்கனுக்குக் காத்திருந்தார்கள். மிச்சமாகிற எலும்பில்கொஞ்சம் சதைத் துணுக்குகள் ஒட்டிக்  கொண்டிருக்கும். கொஞ்சம் சதையும், எலும்பும் கலந்திருக்கும் அதை பிரிசரில் போட்டு வைத்திருக்கிறார்கள். வழக்கமான விலையை விடக் குறைவு. சூப்புப் போலக் குடிக்கலாம். மசாலா பொடி போட்டுக் குழம்பாக்கிக் கொள்ளலாம்.

ஒருவாரம் ஜனதா சிக்கன் போட்டாள்.ருசி பார்க்கலாம் என்று சொன்னாள்.

“அதுக்கு பெரிய டிமாண்ட் அக்கா, க்யூ நிக்கிறாங்க. பாவப்பட்ட ஜனங்களாத்தா இருக்கணும்”

காடை கவுதாரின்னு போயி கெடைக்காத போது ஜனதா சிக்கன் ஒரு நா வாங்கிட்டு வந்த்தான் ஸ்வர்ணவேல்.

சாப்பாட்டுப் பையை முத்துலட்சுமி எடுத்துக் கொண்டாள். துணிப்பையை பெனாசிர் தோளில் மாட்டிக் கொண்டாள்.கனமான இறக்கைகள் முளைத்தது போலிருந்தது.

“துணிப்பையைப் பாக்கிறப்போ, அக்கா நீ வர ரொம்ப நாளாகுமோன்னு  பயமா இருக்கு”

“அதெல்லா இல்லடி”

“நீ உடுத்தியிருக்கிற புதுப் புடவையைப் பாக்கறப்போ ஏதோ விசேசம்ன்னு தோணுதுக்“ ஊர்லே ஏதாச்சும் விசேசமாக்கா.. சொல்லக்கா “

“ தெரியலே. வா வான்னு வாப்பா கூப்புட்டே இருக்கார். போயிட்டுதா வர்றதுன்னு கெளம்பிட்டேன்.”

“ என்னமோ சந்தேகம் வந்துச்சு “

“அதெல்லா ஒண்ணுமில்ல. எதை வுடுத்தினாலும் வெளுத்துப் போன மாதிரி இருக்குது. அதனால் போன மாசம் எடுத்த புதிசெ உடுத்திட்டேன்”

 

பெனாசிர்  முகத்தில் தெரிந்த தெளிவு  ஏதோ விசேசம் போல் எண்ணத் தோன்றியது முத்து லட்சுமிக்கு .  அப்படி அவள் ஊரிலேயே ஒதுங்கிக் கொண்டு விட்டால் தன் நிலைமை என்ன வாகும். இன்னொரு அறை தேட வேண்டும். நாலைந்து பெண்கள் இருக்கும் அறைதான் அவள் மனதில் இருந்தன. பெனாசிரிருடன் இருப்பது போல் இரண்டு பேர் இருக்கும் அறை கிடைப்பது சிரமம்தான். அதற்குள் இன்னொரு வேலை தேட வேண்டும். வேலை கேட்கப் போகிற இடங்களிலெல்லாம் இடது கையை விலக்கி காட்டவேண்டியிருக்கிறது. நடந்த விபத்து பற்றி விரிவாய் சொல்ல வேண்டியிருக்கிறது.

மில் நிர்வாகம் தந்த பணத்தை அவளை மில் வேலையில் சேர்த்து விட்ட புரோக்கர் ஸ்டீபனிடம் தந்து விட்டதாகச் சொன்னார்கள். “ நீ வந்து  சேர்ரப்போ நீ குடுத்த  லெட்டர்லெ நீ அவனுக்கு பொதுவா ஆதரைஸ் பண்ணித் தந்ததும்   இருந்துச்சே , அதனாலதா தந்தம். வெளிப்படையா தர முடியாத நஷ்ட ஈட்டுத் தொகைன்னாலே அவனே வாங்கிட்டுத் தந்தர்ன்னு போனான்”   . ஸ்வரணவேலுவுடன் ஸ்டீபனின் ஊருக்கு அவனைத் தேடி போகத் திட்டமிட்டிருந்தாள். ஸ்வர்ணவேலுவைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது  பின்னர்.

 

காலை நேரத்துக் குளுமையை அனுபவிக்கிறவர்கள் மாதிரி நடந்து கொண்டிருந்தார்கள். பேருந்து நிறுத்த நிழல் குடையில் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மரக் கட்டைகளை சேர்த்து வைத்த மாதிரி கிடந்தார்கள். உயரமான நியான் விளக்கின் கீழ் நிழல் விழுந்து கிடந்தது. அதன் உச்சி வானத்து நீலத்தைக் கரைத்திருந்த்து.

“திரும்பி தனியா நடந்து போவே”

“பரவாயில்லேக்கா”

“காலையில இப்பிடி நடந்து எவ்வளவு நாளாச்சு முத்து. ஆசைப்பட்டு நடக்கக் கூட நேரம் வாய்க்கறதில்லே. ஆசைப்பட்டாலும் நடக்க முடியுமான்னு தோணலே. ஜாக்கிரதையா இரு. பொழுது போகலீன்னா, செல்வி அக்காகிட்ட துணி வாங்கிப் பிரிச்சிட்டுக் கெட. பொழுது போகும். அடுத்து என்னன்னு  ரெண்டு பேரும் யோசிக்கணும் போலிருக்கு”

ஏர் பேக்கிலிருந்து பாலிதீன் பை சுற்றப்பட்டதை எடுத்துத் தந்தாள் பெனாசீர். “புதுப் புடவை”

“இங்க வந்து தர்றியா”  ஒற்றைக் கையை நீட்டி வாங்கிக் கொண்டாள்.

“ ஒத்தக்கயிலெ வாங்கிக்கறது அபசகுணமில்லைதானே..”

“ இல்லே..”

“ இருக்கற  கையிலதானே வாங்க முடியும்.. “ மில் வேலையில்  அவளின் கை துண்டாகியிருந்தது. தொடர்ந்து மூன்று ஷிப்ட் செய்த ஒரு நாள் காலையில் தான் அவளின் கை கோண் வையிண்டிங் இயந்திரத்தில் சிக்கி  சிதைந்தது. அதன் பின் எங்காவது அடைக்கலம் கிடைக்குமா என்று தேடி பெனாசிரின் அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.. ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. ஒற்றைக் கையை வைத்துக் கொண்டு எந்த வேலைக்குப் போவது என்று தீர்மானமாகவில்லை. பார்க்கலாம் பார்க்கலாம் என்று பெனாசிர் பல தரம் சொல்லி ஆறுதல் தந்திருக்கிறாள்.

 

“வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதா, வீட்லெ குடுத்தா சாதாரணமா இருக்கும். போறப்போ குடுக்கலாமுன்னு வெச்சிருந்தன்.”

வலது புறத்தில் அன்னலட்சுமி பேக்கரியிலிருந்து மருதமலை மாமணியே  பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கண்ணாடிகள் பலவகைக் கேக்குகளை  வெளிச்சம் போட்டுக் காட்டின .

“எங்க ஊர் டெண்ட் கொட்டாய் ஞாபக்மே வருது முத்து.   இந்தப் பாட்டுச் சத்தத்தைக் கேட்கறப்போ”

“எல்லார் ஊர் டெண்ட் கொட்டாய் ஞாபகமும் வரும், அந்தப் பாட்டைக் கேட்டா, ”

” டீசாப்புடலாமா”

“பஸ் வந்துருமே”

“அடுத்து வர்ற பஸ்லெ போலாம். பஸ்தா  நெறைய கெடக்குதே”

“டீக்கடையில டீக் குடிச்சு ரொம்ப நாளாச்சு. மாசக் கணக்கில் இருக்கும்”

“நல்ல சமையல்காரிக வெளியெல்லா சாப்புட மாட்டாங்க”

 

பாலித்தீன் பையின் சலசலப்புடன் அவள் திரும்ப நடந்து கொண்டிருந்தாள். கோபாலன் பூக்கடை அருகில் இருவர் நிற்பது தெரிந்தது. அதில் ஒருவன் ஸ்வர்ணவேலு, அவன் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை மாரியம்மன் கோவில் வாசலில் கூட அவனுடன் ஒரு தரம் நெருக்கமாகவே பார்த்திருக்கிறாள். இப்போதும் அவர்கள் நெருக்கமாகவே நின்று கொண்டிருந்தார்கள். ஸ்வர்ணவேலு முதுகைத் திருப்பி வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணின் முகம் இருட்டும் வெளிச்சமுமாய்த் தெரிந்தது. நல்ல களையான முகம்தான். களையான முகங்கள் அவளுக்கு எப்போதும் பொறாமையைத் தரும்.

நடையை விரைசலாக்கிக் கொண்டு பரபரத்தாள் முத்துலட்சுமி. வெள்ளிரிக்காய் போன்ற அவளின்  இடது கையிலிருந்து சேலை இருந்த பாலித்தீன் பை நழுவப் பார்த்தது. மாரியம்மன்  கோவில் கதவு திறந்து இருக்க உச்ச ஸ்தாயியில் மாரியம்மனைப் பற்றிய பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

குமரன் வீதி முக்கில்  களிமண் பொம்மைகள்  பரவிக்கிடந்தன. தொந்தி பெருத்த விநாயகர்கள் ஏகமாய் இருந்தார்கள். தொந்தியைக் காட்டிக்கொண்டு திருஷ்டி பொம்மைகள் தென்பட்டன.பொம்மை வாங்கி நாளாகி விட்டது ஏதாவது வாங்க வேண்டும் என்பது மனதிலிருந்தது. ஆனால் இவை தண்ணிர் பட்டால்  குழைந்து உருவம் காணாமல் போய் விடும். வீட்டு ஓட்டிலிருந்து சொட்டும் மழை நீர் கரைத்து விட்டு விடும். ” இதெல்லாம்  களிமண் பொம்மையா “

“ பிளாஸ்டர் ஆப் பாரீஸ்..   அப்புற காகிதக்கூழ்  “

“ தண்ணி பட்டா கரஞ்சு போயிருமா ” பதில் சொன்ன பெண்ணின் உடையில் வடநாட்டுத்தனம் இருந்தது.பாசிகளை கழுத்தில் கனமான மாலையாகியிருந்தாள்.கையிலும் பாசிகளை வளையல்கள் போல் போட்டிருந்தாள். ஒரு நிமிசம் வினோதமானப் பார்வையாய் முத்துலட்சுமி அவளை  அளந்தாள். தன் உருவத்திற்கு வினோதமான ஆடைகளைப் போட்டு விட்டமாதிரி இருந்தது.

 

 

பேருந்து பெனாசிரை ஏற்றிப் போனபின் முத்துலட்சுமி  தெற்கு முக்கு வந்துத் திரும்பிப் பார்த்தாள்.ஸ்வர்ணவேலுதென்படவில்லை.அவனுடன் இது போல் வீதி முக்குகளில் பல தரம் அவள் நின்று பேசியிருக்கிறாள்.இன்று அவனுக்கு முழுக்கைகள்  உள்ள பெண் தேவைப்பட்டிருக்கிறாள். ஊனமான தன் கை அவளை தெருவின் ஓரத்தில் கொண்டு வந்து விட்டதாக நினைப்பு வந்தது..சேலையைத் தாழ்த்தி ஊனமானஇடது  கையை மூடிக் கொண்டாள்.

தூரத்தில் பேருந்து புள்ளியாய் மறையும் வரை வீதி நீண்டிருப்பது ஆச்சர்யம் அளிப்பது போல் பார்த்தாள்.

***

To read the English translation of the story : http://www.akshra.org/full-hands/

ஈரம்

மாலன்

கட்டை  விரலால்  உன்னி  உன்னிப் பறந்தது ஊஞ்சல். ‘டிக்கெட் டிக்கெட்’ என்று ஒரு  குழந்தை  எல்லார்  கையிலும்  குப்பைக்  காகிதத்தைத்  திணித்துக் கொண்டிருந்தது. “ ஏலேலோ ஐலசா ” என்று சின்னக் குரலில் மெலிதாய் ஒன்று ராகமிழுத்தது. சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, ஒன்று எழுந்து நின்றது. ‘ வேகமா அண்ணி , வேகமா … ’ என்று ஒன்று ‘ மானம் ’ வரைக்கும்  கையை  மல்லாந்து விரித்தது.

பார்க்கப் பார்க்க இவனுக்குச் சிரிப்பாய் வந்தது. அண்ணிக்கு என்ன வயசிருக்கும்? ஐம்பது…? வெட வெட வென்று இந்த உயரத்தையும் நெகிழ்ந்து போகாத உடம்பையும் பார்க்கும்போது நாற்பதுதான் சொல்லலாம். நாற்பதோ … ஐம்பதோ , இப்படி ஓர் அரைக் கிழவி இந்தச் சின்னக் குழந்தைகளுக்குச் சமானமாக உட்கார்ந்து  ‘ கப்பல் ’  ஒட்டிக் கொண்டிருக்கிறாள்  என்றால்  சிரிப்பு  வராமல்  என்ன  செய்யும் ?

படை படையாய்த் திரண்டு வந்திருக்கின்ற இந்தப் பசங்களில் இவள் யாருக்கும் அண்ணியில்லை! பத்துப் பன்னிரண்டு வருஷம் பிள்ளையில்லாமல் இருந்துவிட்டு, கொஞ்சம்  எட்டின சொந்தத்தில் இவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டபோது, இவன் கூப்பிட ஆரம்பித்த சொல் அது. அதென்னமோ, அப்போது அம்மா என்று கூப்பிடத் தோன்றவில்லை.  இவன் ஸ்வீகாரம் வந்தபோது எட்டு வயசிருக்கும். கண் சிரிக்கும். மூக்கு ஒழுகும்.  அந்த ‘ ட்ரவுசர் ’ பருவத்து நாட்களில், அண்ணி என்ற அந்த வார்த்தையின் சப்தம் இவனுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். இதுவே இந்தப் பதினைந்து வருஷத்தில், இந்த நாலு வீட்டுக் காம்பவுண்டிற்கும், அக்கம்பத்திற்கும் பெயரும் உறவுமாகிப் போனது.

இத்தனைக்கும் அண்ணிக்குக் குழந்தை இல்லை. மூஞ்சியில் அடித்த மாதிரியான இந்த ஏமாற்றத்திற்கு அப்புறமும் அவள் வக்கரித்துப் போயிவிடாமல் இருந்தாள். ஊரையே ஸ்வீகரித்துக் கொண்ட மாதிரி எல்லாரிடமும் பிரியமாய் இருந்தாள். கட்டிப் பிடித்துக் கசகசக்காத பிரியம்  இழுத்து வைத்துக் கொண்டு இறுக நெருக்காத பிரியம். அதிகம் பேசக்கூடாச் செய்யாத பிரியம்.  நிதானமாய், அழகாய் செய்கைகளில் காட்டுகிற பிரியம். சொந்த வீட்டில் கிழிசல் பனியனும், அழுக்கு வேஷ்டியுமாகச் சுற்றி வர முடிகிற மாதிரியான இயல்பான பிரியம்.

இந்தப் பிரியத்தில் சுற்றுப்புறம் முழுதும் செழித்தது. அவன், அதன்பின் அந்த ஈரத்தில் நனைந்து,  எத்தனையோ  உயிர்கள்,  நெடுநெடுவென்று  உயர்ந்தன.

அதில்  இந்த  புவனாவும்  ஒருத்தி.  பிறந்ததிலிருந்து  இவனுடன் முடிச்சுப் போட்டுப் பேசப்பட்டு சில மாதங்களுக்கு முன், இவனுக்கு அப்போது வேலையில்லை என்ற காரணத்தால் வேறொருவனுக்கு மனைவியாகிப்போன பக்கத்து வீட்டுப் பெண். இவனுக்கு  இதில்  பெரிய  துக்கமில்லை.  என்றாலும் ஏமாற்றம். இவன் தனக்குள் குறுகிப்  போனான்.  வேலையில்லை  என்று  சிறுமைப்பட்டதில்  பெரிய  காயம்.

இதையெல்லாம் இவன் சொல்லாமலேயே அண்ணி புரிந்து கொண்டிருந்தாள். புவனாவைப் பற்றி இவனிடம் பேசத் தயங்கினாள். இதற்குப்பின் இவனிடம் இன்னும் அன்பாகப் பழகினாள். இன்னும் நிதானமாகப் பேசினாள். எதற்காகவும் இவன் வதைபடக்கூடாது என்கிற ஜாக்கிரதையோடு நடந்து கொண்டாள். அப்போதெல்லாம் அண்ணியைப்  பார்க்கிறபோது,  இவன்  மனம்  கசிந்து  போவான்.

இவன் வீட்டுக்கு வந்தபோது அண்ணி வாசல் திண்ணையில் உட்கார்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் எழுந்து வந்தாள். முகம் கழுவிக் கொண்டு  வந்து  ஊஞ்சலில்  உட்காரக்  காத்திருந்தாள்.  காப்பியைக்  கொடுத்துவிட்டு …

“ இன்னிக்கு சரசு வந்திருந்துச்சு … ” என்று மெதுவாய் ஆரம்பித்தாள்.

“ என்னவாம் … ? ”

“ புவனாவையும் மாப்பிள்ளையையும் ‘ மறுவீடு ’ அழைக்கிறாங்களாம் நாளைக்கு ” – இவன் முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தாள்.

“ சர்தான் … ”

“ அன்னிக்குப் பெரிய பந்தி போடுதாங்களாம். நம்ம கூடத்திலே பேடலாமான்னு கேட்டிச்சு.  சரின்னுட்டேன்.  ஊஞ்சலைக் கழட்டி  ஓரம்  போடலாம்,  வாயேன்…”

இவன் ‘ விருட் ’ டென்று எழுந்து கொண்டான். ஊஞ்சல் குலுங்கிக் கோணல் மாணலாய் ஓர் ஆட்டம் ஆடி ஓய்ந்தது. அண்ணி பலகையைத் துடைத்து உட்கார வசதியாய்  ஒரு  பக்கம்  வைத்தாள்.  சங்கிலியை வளைத்துத் தொங்கவிட்டாள். கதவுக்குப்  பின்னாலிருந்து  சின்னத்  துடைப்பமாய்  ஒன்றைக்  கொண்டு  வந்தாள். ஐந்தே  நிமிஷத்தில்  பெருக்கி  மெழுகி  பெரிசாய்க்  கோலம் போட்டாள். கூடம் திடீரென்று  அழகான  மாதிரி  இவனுக்குப்பட்டது.

இவன் வளைத்துக் கட்டியிருந்த  சங்கிலியைப்  பார்த்தான்.  புவானாவிற்கும்  அவள்  மாப்பிள்ளைக்கும் போட்ட மாலை மாதிரி கிடந்தது அது.  அன்றைக்கு  முழுதும் அது கைபடும் போதெல்லாம் இவன் மனசைப்போல, ‘ புவனா புவனா ’ என்று குலுங்கியது. ஆகிருதியும், பலமும் உள்ள யானையைக் கட்டிப் போட்ட மாதிரி, இரும்பு இரும்பாகப் பேசியது. பலத்தைக் காண்பித்து விடும்படி, ‘ புல் அப்ஸ் ’ எடுக்கச் சொன்னது. இவனுடைய சந்தோஷத்தின் வக்ரத்தை வெளிப்படுத்துகிற மாதிரி, விருந்துக்கு  வந்த  குழந்தையைக் கம்பி  மடக்கில்  உட்கார்த்தி  வைத்து  அழப்  பண்ணுகிற  உற்சாகம்  கொடுத்தது.

விசேஷம் முடிந்து கழற்றிப் போட்ட பலகையை மாட்ட எடுக்கும்போதுதான் கவனித்தான். கீழே கிடந்தபோது அதில் நிறைய கால்கள் நடந்திருக்கின்றன. பாதமும் புழுதியும் ஊஞ்சலில் நடந்து  ஊஞ்சலில்லாத  இடத்தில்  குதித்து  மறைந்திருந்தன. அவை புவனாவின்  ஞாபகம் மாதிரி அழித்தாலும் போகாததாக இருந்தன. அழித்த அடையாளமும் சேர்ந்து அசிங்கமாக மாறியது.

ரேழியில் நிழல் தட்டியது. படித்துக் கொண்டிருந்த புஸ்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தான். பக்கத்து வீட்டு சரஸ்வதி அக்கா. இவனைப் பார்த்து லேசாகச் சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். கொஞ்சங்கூட தயக்கமோ, கூச்சமோ இல்லாத நடை. சொந்த வீட்டிற்குள் நடந்து புழங்குகிற மாதிரி என்ன உரிமை !  என்ன ஸ்வாதீனம் !

“ அண்ணி… கூப்பனும், ஏனமும் தந்துவிட்டுப் போறேன். பால் வாங்கி வைச்சுடுறீங்களா ? ”

“ சரி … வைச்சுட்டுப் போ. எங்கன, சினிமாக்கா … ? ”

“ ஆமாம் அண்ணி … ”

“ அவரு ஊர்ல இல்லியாக்கும் … ? ”

“ கேம்ப் போயிருக்காரு, இல்லினா இப்படிக் கிளம்ப முடியுமா ? கொன்னு போட்டுடுவாங்க … ”

“காலையிலே வடகம் பிளிஞ்சுட்டு இருந்தியே, புவனாவுக்கு சீர் போவுதாக்கும் … ? ”

“ ஆமாம் அண்ணி !  அது உண்டாகியிருக்காம். மாப்பிள்ளை தபால் போட்டிருக்காக. ‘ அவுங்க ’ வந்ததும் போய்ப் பார்த்துவிட்டு வரலாம்னு இருக்கேன் … ”

சரஸ்வதி  போகும்போது  இவனைப்  பார்த்துச்  சிரித்து  விட்டுப்  போனாள்.

இவன் புஸ்தகத்தை மூடி விசினான். என்னவென்று சொல்ல முடியாத வேதனையாக இருந்தது. வாசலில் வந்து நின்றான். இலைகூட அசங்காத புழுக்கமாக இருந்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே மழை ‘ பட பட ’ வென்று இறங்கியது. வானுக்கும்  பூமிக்கும்  வெள்ளிச்  சரிகையாய்  மினுங்கிக்  கொண்டிருக்கும்  மழை.

அண்ணி  புறவாசலுக்கு  ஓடிவந்து ,  பக்கத்து  வீட்டின்  முற்றத்தில்  கிடந்த வடகம் பிழிந்திருந்த பாயைப் பரபரவென்று இழுத்து உள்ளே போட்டாள். சாய்ந்து அடிக்கிற  சாரலிலிருந்தும்  காப்பாற்ற  வேண்டியிருந்தது.  “ கல்யாணி …  இதக்  கொஞ்சம் பிடி.  உள்ளாற  கொண்டு  போட்டுடுவோம் … ” என்று இவனையும் உதவிக்கு அழைத்தாள்.

“ சரசு … வடகத்தைப் பிளிஞ்சு போட்டுட்டு, சினிமாவுக்குப் போயிடுச்சு பாவம் … அம்புட்டுப்  பாடும்  வீணாப்  போச்சே … !  புள்ளைத்தாச்சிப்  பொண்ணுக்கு  எடுத்துப் போறது … ”

இந்த  இரக்கத்தின்  மீது  இவனுக்கு  எரிச்சல்  வந்தது.

“ ஆமாம்  அப்படியாவது,  என்ன  சினிமா  வேண்டிக்  கிடக்கு … அபத்த  சினிமா … ”

“ எலேய் … கோடைமழை  வரப்போவுதா  இல்லியானு  சோசியம்  பார்த்துக்கிட்டா வடகம் பிளிவாங்க ”  என்று  அவள்  பரிந்து  கொண்டு வந்தபோதுதான்  அது  நடந்தது …

பறந்து பறந்து வந்த ஊஞ்சல் இவள் முதுகில் இடித்து லாத்தியது. மழையில் நனைந்து  ஏற்கனவே  கூழாய்  நெகிழ்ந்திருந்த  வடகம் காலை வாரிவிட, அண்ணி பாயில் சறுக்கிக் குப்புற விழுந்தாள்.  சில்லுமூக்குப்  பெயர்ந்து  மூக்கினடியிலும்,  நெற்றிப் பொட்டிலும்,  ஊன்றிக்கொள்ள  முன்வந்த கையிலும் காயம். ரத்தம் பிசுபிசுவென்று  கசிந்து  கொண்டிருக்கும்  காயம்.  சதையின்  சிகப்பு  விழித்துக்  பார்க்கிற  அளவு  பெரிய  காயம்.

அத்தனை  குழந்தைகளும்  விக்கித்துப் போய் நின்றன. ஊஞ்சலை விட்டு இறங்கின.  ஓரமாய்  நின்றன.  அந்தக் குழந்தைகளின் கண்களில் மிரட்சி எட்டிப் பார்த்தது.  சிலவற்றின் தொண்டையில் பயம் அழுகையாய் விசும்பியது. வலி, காயம், பயம் எதுவுமே என்னவென்று தெரியாத மிகச் சின்னக் குழந்தை ஒன்று அண்ணியின் முகத்தில்  அப்பிக்  கொண்ட  மாவைக்  கண்டு  சிரித்தது.

இவனுக்குப்  பற்றிக்கொண்டு  வந்தது. ‘ பிடித்துத் தள்ளுவதையும் தள்ளிவிட்டு என்ன  இளிப்பு … ’ பாய்ந்து வந்து கைக்குக் கிடைத்த பையன்களைப் பிடித்துச் சாத்தினான்.

“ டேய் , டேய் … பச்சைப் புள்ளைங்களைப் போய்  ஏண்டா  அறைஞ்சு  கொல்ற … ” இத்தனைக் காயத்திலும், இந்த வலிகளுக்கு நடுவேயும் அண்ணி அந்த வால்களுக்குப் பரிந்து கொண்டு வந்தாள்.

அண்ணி செத்துப் போனாள். டெட்டனஸ், தொற்று என என்னவோ மருத்துவ பாஷைகளில் காரணம் சொன்னார்கள்.

அவளைக் கடைசியாய் இந்த ஊஞ்சல் பலகையில்தான் படுக்க வைத்துக் குளிப்பாட்டினது. இவன்  நெஞ்சாரப்  பிரியம் செலுத்தின எல்லா ஸ்வீகாரக் குழந்தைகளும்  சுற்றி  நின்றன. புவனாவும் அவள் மாப்பிள்ளையும் கூட. இவள் யாரையும் பார்க்காமல் கேட்காமல் அந்த ஊஞ்சல் மேல் கிடந்தாள். அத்தனை பேரும் குடங்குடமாய்  ஊற்றின  தண்ணீர்  அவள்  மேல் …  அந்த  ஊஞ்சல்  மேல்.

ரொம்ப  நாளைக்கு  அந்த ஊஞ்சலைப் பார்க்கும் போதெல்லாம் அந்த ஈரம் காயவே  இல்லை  என்று  இவனுக்குத்  தோன்றும்.

சில  ஈரங்கள்  காய்கிறதே  இல்லை …

***

To read the story in Hindi:http://www.akshra.org/%e0%a4%a8%e0%a4%ae%e0%a5%80/

மழை நின்ற பொழுதொன்றில்

நிலாரவி

மழை நின்ற பொழுதொன்றில்

மௌனமாய்

மலர்ந்திருக்கிறது பூமி

 

நீரிட்டு பூமி துலக்கியபின்

பளிச்சென்றிருந்தது

வானம்

 

நீர்த் திவலைகளை கோர்த்து சரமாக்குகின்றன மின்சாரக்கம்பிகள்

 

சிறகுகளைச் சிலிர்த்து

சிறுமழை செய்தன பறவைகள்

இலைநீர் துளிர்த்து

இன்னொரு மழை செய்தன மரங்கள்

 

இளம்குளிரை இதமாய்

போர்த்தியிருந்தது பூமி

தேங்கிய நீரில்

நிலம் நெய்த

சின்ன சின்ன

நீரோடைகள்

குழந்தைகளின்

காகித கப்பல்களுக்காக

காத்திருந்தன

 

சொட்டச் சொட்ட

நனைந்து நின்ற மரங்கள்

தலைதுவட்டும்

கதிரவனின் கைளுக்காக

காத்திருந்தன

 

மழை தந்த முத்தத்தில்

முகம் சிவந்தது மண்

ஈரக்காற்றில் கனமானது

இளைத்திருந்த பூமி

 

வண்ணப்பிறை ஒன்றை

வரைந்திருந்தது வானம்

 

கோப்பைத் தேநீரின்

இளஞ்சூட்டில்

இதழ்கள் அருந்தின

உன் நினைவுத் தேனை.

நனையத்  தோன்றுகிறவர்கள்

கார்த்திகா ராஜ்குமார்

“மழையே மழையே…. போ… போ

மற்றொரு நாள் திரும்ப வா ”

 

பால வயதிலேயே பாட வைத்து

மழையை மழலையினரிடமிருந்து மனதளவில்

விலக்கப் பார்த்து பெரியவர் முயன்றாலும்

பிள்ளைகளுக்கும் மழைக்குமான

உறவுகள்

ரகசியமாய் துளிர்த்துக் கொண்டே  இருக்கிறது

 

பெரியவர்கள் அறியாவண்ணம்

மழையிலும்  மழை நாட்களிலும்

விளையாட பட்டியலுண்டு பிள்ளைகளிடம்.

 

“மா மழை போற்றுதும்…  மா மழை போற்றுதும் ”

என்பாரும் புத்தகங்களோடு சரி .

“நீரின் றமையா துலகெனின் யார்  யார்க்கும்

வானின் றமையாதொழுக்கு..”

தாடிக் காரரின் தங்க வார்த்தைகள்

தேர்வுக்கு பிள்ளைகள்

மனனம் செய்வதற்கு மட்டும்.

 

ஐயன்மீர்

என்றாவது நீங்கள்

மழை சுபிட்சத்தின் அடையாளம்

மழைச்  சாரல்கள் தரும் பெரும் சுகம்

மழை சூழலை மாற்றும் மந்திரம்

மழை புது உருவினை எவருக்கும்

…………தருமொரு அற்புதம்.

மழை நனவாகும் கனவுகளின் இனிய அனுபவம் ‘

மழை புரிந்திருக்கும் தாவரங்களை

குளிர்விக்கிற ரகசியம் .

மழை கவிதைகளுக்கான ஜன்னலை

காற்றோடு திறக்கும்

மழை மனதில் மீட்டும்

பிரிய நினைவுகளின் பழம் இசையை ”

என்றெல்லாம் பிள்ளைகளிடம்

சொன்னதுண்டா ?

 

மழையைத் தொட ஓடும்

அவர்களிடம்

அப்படிச் செய்யாமல் இருக்க

கதைகள் சொல்லி, காரணங்கள் அடுக்கி, பயம் காட்டி

கடவுளின் மொழியை புரிய விடாமல்

அழிச்சாட்டியம் செய்கிறீர்.

ஈரம் படிந்த இலக்கியம்

மாலன்

எழுந்திருக்கும் போது வீசி எறிந்த போர்வையைப் போல வீதியெங்கும் ஈரம் ஓர் ஒழுங்கற்றுப் படர்ந்து கிடக்கிறது. தீபாவளிக்கு நீர்ச்சேலை நெய்ய திரண்டு நிற்கின்றன மேகங்கள். எவரும் அழைக்காமலே வந்து நிற்கிறது மழைக்காலம். ”இப்ப இந்த ம்ழையில்லை என்று எவன் அழுதான்” என எரிச்சல்படும் நகரவாசிகள் மீது சரம் சரமாய் பூந்தூறல் தூவிப் புன்னகைக்கிறது வானம்.

கார்காலம் மனதில் கவிதையும் சுரக்கும் காலம். முன்பு எழுதிய வள்ளுவனிலிருந்து இன்று மலர்ந்த புதுக் கவிஞன் வரை மழையைப் பாடாத கவிஞர்கள் எவரும் இல்லை..மழையைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனும் இல்லை. இந்திய இலக்கியத்தின் ஏராளமான பக்கங்களை மழை நனைத்துக் நடக்கிறது. படித்தவற்றில் பல இன்று உலர்ந்து விட்டன. சில இன்னும் வடியாமல் உள்ளேயே தங்கிவிட்டன.

வானத்தினுடைய சிறப்பே மழைதான் என்கிறார் வள்ளுவர். இறைவனுக்கு அடுத்ததாக இரண்டாம் இடம் பெற்று அது குறளில் விரிகிறது. இரண்டு வரிகளுக்குள் அவர் தொன்மமும் பேசுகிறார். அறிவியலும் பேசுகிறார். தங்கக் காசின் இரண்டு பக்கங்கள் போல தமிழனின் இரண்டு முகங்கள் இவை.

கடலில் உள்ள நீர் ஆவியாகி, மேகமாகி மழையாக மண்ணுக்குத் திரும்புகிறது என்பது நாம் ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் பயின்ற அறிவியல். அதை இரு வரிகளில் இலக்கியமாகச் செய்திருக்கும் அற்புதம் திருக்குறள்.

முற்றும் அறிந்த ஓரு முது அறிஞானகப் பேசுகிறான் வள்ளுவன் என்றால் ஒரு குழந்தையைப் போலக் குதூகலிக்கிறாள் ஆண்டாள். வாளியிலிருந்து குவளை குவளையாக நீரை முகர்ந்து கொட்டுவதைப் போல ஆழியிலிருந்து மொண்டு மழையாகக் கொட்டு என்கிறாள் அவள். வெண்ணையைத் திருடி வாய்க்குள் ஒளித்து வைத்துக் கொண்டதைப் போல கண்ணன் மழையையும் மறைத்து வைத்திருக்கிறானோ என்ற சந்தேகத்தில் “ஆழி மழைக்கண்ணா! நீ ஒன்றும் கை கரவேல்!” என்று ஒரு அதட்டலுடன் ஆரம்பிக்கிறது அவளுடைய பாடல்.

பாரதிக்கோ மழையைக் கண்டால் கன குஷி. என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம், கண்டோம் கண்டோம்’ எனத் தாளங்கள் கொட்டிக் குதித்துக் கொண்டாடுகிறார்.

ஈரம் படிந்த இலக்கியத்தின் பக்கங்களில் எனக்குப் பிடித்த பாடல் ஒரு குடியானவனுடையது. பள்ளுப் பாட்டு என்று எனது பாடப் புத்தகங்கள் சொல்லின. 16ம் நூற்றாண்டில் விவசாயிகள் வளர்த்த இலக்கியப் பயிர் அது.

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி –மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னுதே

என்ற பாடலை நீங்களும் என்றேனும் ஒரு நாள் படித்திருக்கலாம்.

அநதப் பாடலை நடத்திய ஆசிரியை அந்த வகுப்பை ஒரு நாடகக் காட்சி போலவே அமைத்து விடுவார். ‘மின்னுதே’வில் ‘தே’ விற்கு ஓர் அழுத்தம் கொடுத்து தரையை ஓங்கி உதைக்க வேண்டும். மொத்த வகுப்பும் அந்த மாதிரி செய்யும் போது ஒரு tap dance போல இருக்கும். ‘கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே’ என்னும் போது உய்ய்ய்ய் என்று சப்தமிட்டுக் கொண்டு ஒரு பையன் இடமிருந்து வலமாக ஓடி ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவான். ‘சொறித் தவளை கூப்பிடுகுதே’ என்னும் போது மாணவிகள் குரலை மாற்றைக் கொண்டு தவளை போல ஒலி எழுப்புவார்கள். குஷியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் கிழக்கே ஈழம். மேற்கே , மலையாளம் இந்த இரண்டு திக்கிலிருந்தும்தான் தமிழகத்திற்கு மழை வர வேண்டும். வடக்கிலிருந்து வராது. அங்கிருந்து எப்போதாவது குளிர்காற்று வீசும். தெற்கிலிருந்தும் அதாவது பொதிகை மலையிலிருந்தும் காற்று வீசும். ஆனால் அது இதமான தென்றல். வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல் என்று தமிழர்கள் பெயர் வைத்தார்கள். மலையாளத்திற்கும் ஈழத்திற்குமாக அதாவது மேற்கிற்கும் கிழக்கிற்குமாக மின்னல் வெட்டுகிறது என்றால் வரப்போவது பெரிய மழையாகத்தான் இருக்கும். அந்தப் பெரிய மழை குறித்துக் கவலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குஷிதான்.

மழை என்றால் சந்தோஷமான அனுபவம் காத்திருக்கிறது என்ற மனநிலையை அந்தப் பாடல் ஏற்படுத்தியது.இன்று குழந்தைகள் Rain Rain Go away என்று பாடுவதைக் கேட்கிறேன். விளையாடுவதற்கு மழை இடையூறாக இருப்பதாக அந்தப் பாடல் சொல்கிறது.

இயற்கை குறித்து இது எந்த மாதிரியான மனநிலைகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஏற்படுத்தும் என்ன, ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.மனிதனுடைய ‘சந்தோஷத்திற்கு’ இயற்கை இடையூறாக இருக்கிறது என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஓர் தலைமுறைக்கு ஊட்டப்பட்டுவிட்டது.

ஈரம் படிந்த இலக்கியமாக இருந்திருக்க வேண்டிய குழந்தைகள் பீங்கான் ஜாடிக்குள் செருகிய பிளாஸ்டிக் பூக்களாகப் பரிணமித்துவிட்டார்கள்

இந்த தேசத்திற்கு நேர்ந்த இழப்புக்களில் இது மிகப் பெரிது.

ஆடிப்பாடி துள்ளி…

முக்கூடற்பள்ளு

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்று தேகுறி- மலை
யாள மின்னல் ஈழமின்னல்
சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே-கேணி
நீர்ப்படு சொறித்த வளை
கூப்பிடு குதே


சேற்று நண்டு சேற்றில்வளை
ஏற்றடைக்கு தே-மழை
தேடியொரு கோடி வானம்
பாடி யாடுதே


போற்று திரு மாலழகர்க்
கேற்ற மாம்பண்ணைச்–சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே.”

மழையே வா

பாரதிதாசன்

மழையே மழையே வா வா — நல்ல
வானப்புனலே வா வா! –இவ்
வையத்தமுதே வாவா!

தழையா வாழ்வும் தழைக்கவும் — மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே…

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே…

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே…

இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ? மழையே…

மழை

பாரதியார்

திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு

AKSHRA
error: Content is protected !!