பால் டம்ளர்

தெலுங்கில் : டாக்டர் முக்தேவி பாரதி
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

“காலைல எழுந்ததிலிருந்து எத்தனை வேலைகள்…? அப்பப்பா…! ஏங்க..! உங்களைத்தானே! அப்படி பாம்பு படுக்கை மேல மஹா விஷ்ணு போலபடுத்திருக்காம உங்க பிரண்ட்ஸ் யாருக்காவது போன் செஞ்சு அவங்க வீட்டு வேலக்காரியை நமக்கு அனுப்பச் சொல்லக் கூடாதா? உங்களுக்கு வீட்டு கஷ்டம் எதுவுமே புரியாது….! உங்ககிட்டே கத்தி என் தொண்டை வலி தான் மிச்சம்”.

வேலை செய்ய முடியாமல் வீட்டில் அனைவர் மீதும் எரிந்து விழுந்தாள் லலிதம்மா. ஆனால் கணவன் சேகர் அசைந்து கொடுக்கவில்லை. லலிதம்மா முக்கி முனகிக்  கொண்டே எல்லா அறைகளையும் பெருக்கித் துடைத்தாள். ஹால் டிவியில் லயித்திருந்த  நவீனைப் பார்த்ததும் அவளுக்கு எரிச்சல் அதிகமாயிற்று.

“டேய் நவீன்! போயி ரோட்டோரமா நின்னு யாராவது வேலைக்காரி போயிட்டிருந்தா கொஞ்சம் கூப்டுட்டு வாயேன்..!” மகனிடம் எரிச்சலை வெளிக் காட்டாமல் கெஞ்சினாள்.

“மம்மீ! போறது வேலைக்காரினு எப்டி கண்டுபிடிக்கறது?”

“எப்டீன்னா…! இது என்ன கேள்வி? கையில ஒரு கூடை, மூடி போட்ட பாத்திரம் இப்டி ஏதாவது எடுத்துகிட்டு நடந்து போனா அவ வேலைகாரியாத் தான் இருக்கும். வேறென்ன?”.

தாயைப் பார்த்து சிரித்தான் பத்தாவது படிக்கும் நவீன். லலிதம்மா சமையறைக்குச் சென்று பாத்திரம் துலக்க ஆரம்பித்தாள். நவீனுக்கு தாயைப் பார்க்க பாவமாக இருந்தது. வீட்டு வேலையெல்லாம் தனியாகச் செய்ய சிரமப்படுகிறாள். ஏதாவது செய்ய வேண்டும்.

“மம்மீ! இன்னீலேர்ந்து நான் சாப்பிட்ட தட்டை நானே கழுவி வைக்கிறேன். என் துணியை நானே துவைச்சுக்கறேன். என் ரூமை கூட நானே பெருக்கிடறேன்” என்றான் தாயை நெருங்கி.

இப்போது தாய் அவனைப் பார்த்து சிரித்தாள். எப்படியாவது ஒரு பணிப் பெண்ணைத் தேடி வந்து அம்மாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தான் நவீன். விரைவில் அதை நிறைவேற்றி விட்டு பெருமையோடு அம்மாவை அழைத்தான்.

“மம்மீ! உனக்கு ஒரு குட் நியூஸ். பார்த்தியா? யார் வந்திருகான்னு?”

லலிதம்மா சமையலறையிலிருந்து வெளியில் வந்து பார்த்தாள். குட்டைப் பாவாடை. நீண்ட சட்டை. கைகளில் சிவப்பு வளையல்கள், கழுத்தில் மணி மாலை. கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையலில் மாட்டியிருந்த ஊக்கை வாயில் வைத்துக் கடித்தபடி நின்றிருந்தாள் ஒரு சிறுமி. அவளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும் என்று நினைத்தாள் லலிதம்மா.

“யாருடா இது?”

“மம்மீ! என் ப்ரெண்ட் ராம் வீட்ல வேல செய்றா இந்த பொண்ணு. நான் தான் சொல்லி கூட்டிட்டு வந்தேன்”.

“உன் பேரென்னம்மா?”

“சர்ப்பா”

“என்னது?” லலிதம்மா அதிர்ச்சியடைந்தாள்.

“என்னடா இது? சர்ப்பம்… பாம்புன்னு சொல்ரா…!”

“இந்த பொண்ணு பேரு சொரூப ராணி. இவுங்க வீட்ல சர்ப்பானு கூப்புடுவாங்களாம்” நவீன் சிரித்துக் கொண்டே விளக்கினான். அச்சிறுமி நவீனைப் பார்த்து சிரித்தாள்.

“அம்மா! நீங்க என்னை ராணீன்னு கூப்பிடலாம்” ரொம்ப முதிர்ந்தவள் போல் சமாதானத்திற்கு வந்தாள் சிறுமி.

ராணி நல்ல சுறுசுறுப்பாக வேலை செய்தாள். பரபரவென்று எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வாசல் கேட்டை மூடிக் கொண்டு சென்று விட்டாள்.

ராணி வந்த பின் லலிதம்மாவுக்கு அப்பாடா என்றிருந்தது. கொல்லையில் பூத்த ஜாதி மல்லிகையைப் பறித்து தொடுத்து தலையில் வைத்துக் கொள்ள நேரம் கிடைத்தது.

இரண்டு நாட்களாகப் பார்க்கிறாள் லலிதம்மா. குப்பைத் தொட்டியில் பளபள வென்று வெள்ளை சாதம். டம்ளரில் ஊற்றிக் கொடுத்த டீ அப்படியே ஆறிப் போய் அங்கேயே இருந்தது. என்ன ஆயிற்று இந்த வேலைகாரக் குட்டிக்கு? இன்று விசாரித்து விட வேண்டும்.

கைகளில் மஞ்சள் வளையல், நெற்றியில் மஞ்சள் நிற பொட்டு, சிவப்பு பாவாடை அணிந்து வந்தாள் ராணி. செருப்பை மரத்தடியில் விட்டாள். உள்ளே வந்தவுடனேயே கிடுகுடுவென்று வேலையில் இறங்கி விட்டாள் சிறுமி.

“ஏய்! ராணீ! உன்னைத்தான்…! சாதம் கொடுத்தா அப்டி குப்பையில வீசிட்டு போறயே! என்ன அர்த்தம்? அரிசி என்ன வெல விக்குது தெரியுமா?”, பெரிய வாக்குவாதத்திற்கு அடிபோட்டாள் லலிதம்மா.

“ஆங்…! அதுவாங்க அம்மா…!” வலது கையில் இருந்த விளக்குமாற்றை இடது கைக்கு மாற்றிக் கொண்டு பதிலளித்தாள் ராணி. “மீந்து போன சோறு, பொரியல் குடுத்தா நாங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போக மாட்டோம் அம்மா. எங்க அக்கா கூட அப்படித் தான். குப்பையில போட்டுடுவோம்”.

வாசல் பெருக்கி சாண நீர் தெளிக்கையில் கொஞ்சம் லலிதம்மா மேலும் தெளித்தது. சட்டென்று நகர்ந்தாள். லலிதம்மாவுக்கு வியப்பு தாளவில்லை.

“கலிகாலம். மீந்து போன சோற  இந்தச் சின்னஜ் சிறுக்கி எடுத்துட்டு போகமாட்டாளாமில்ல…!”.

இரண்டு நாட்களாக வியற்காலையிலேயே வந்த ராணி அன்று காலை எட்டு தாண்டிய பின்னும் வரவில்லை. லலிதம்மாவுக்கு திகிலாக இருந்தது. வாசல் பெருக்கி கோலம் போட வேண்டுமே! விளக்குமாறும் கையுமாக வாசலுக்குக் கிளம்பினாள்.

“இங்க குடுங்க அம்மா…! நான் கூட்றேன். நானும் எங்க அக்காவும் நேத்து ராத்ரி சினிமாவுக்கு போயிருந்தோம். காலையில எழுந்திருக்க நேரமாயிடுச்சு. ஒரே தூக்கம் தூக்கமா வந்திடுச்சி..!”

லலிதம்மாவின் கையிலிருந்த விளக்குமாறு கை மாறிற்று. வேலையை முடித்து விட்டு ராணி வாசற்படி அருகில் நின்றாள்.

“ஊம்..! இந்தா. டீ குடி…!” டப்பென்று டீ டம்ளரை அவளருகில் வைத்தாள் லலிதம்மா. டம்ளரிலிருந்து சூடான டீ கொஞ்சம் கீழே சிந்திற்று. ஆனால் ராணி அதை கையில் எடுக்க வில்லை. லலிதம்மா அவளை ஆராய்வது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“டாக்டர் ஐயா பாலு குடிக்க சொல்லிருக்காருங்க அம்மா…!”

லலிதம்மாவுக்கு இன்னுமொரு ஆச்சர்யம். எதுவும் பேசாமல் பாதியில் விட்டு வந்த சமையலை கவனிக்கத் திரும்பினாள் லலிதமமா. டீ டம்ளர் அங்கேயே இருந்தது. ராணி கிளம்பிச் சென்று விட்டாள்.

சாப்பிட அமர்ந்த கணவன் சேகர், மகன் நவீனிடம் ரகசியமாகச் சொன்னான், “உங்க அம்மா வேலைக்காரி இல்லாத போது அந்த கோவத்தை எல்லாம் நம்ம மேல காட்டி கிட்டு இருந்தா. இப்போ ராணி வந்த விட்டு, அம்மா சமையல் கூட நல்லா செய்யறா பார்த்தியாடா? மகனே!” இருவரும் சிரித்துக் கொண்டனர்.

“இந்த விசித்திரத்தை கேட்டீங்களா?” லலிதம்மா சாதத்தில் மோர் விட்டபடி கணவனைப் பார்த்து சொல்ல ஆரம்பித்தாள்.

“அந்த குட்டியை டாக்டர் பால் தான் குடிக்கணும்னு சொல்லிட்டாராம்” அவள் குரலில் வெளிப்பட்ட ஆச்சர்யம் மற்ற இருவரையும் கூட பற்றிக் கொண்டது.

“ஏனாம்? கேட்டாயா?” சேகர் மனைவியைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தான்.

“என்னவோ? எனக்கென்ன தெரியும்?”

“இருக்கலாம். சொல்லியிருக்கலாம். அதிலென்ன தப்பு? சின்ன பிள்ளைகள் பால் ஹார்லிக்ஸ் போர்ன்விடா குடிப்பதில் தவறென்ன?” சேகர் அவளை சமாதனப்படுத்த முயற்சித்தான்.

“யாரானும் கேட்டா சிரிக்கப் போறாங்க. வேலைக்காரக் குட்டிக்கு  டம்ளர் நிறைய பால் யாராவது குடுப்பாங்களா? எங்கேயாவது கேள்விபட்டிருக்கோமா? இஷ்டமிருந்தா குடுக்கற டீய குடிச்சுட்டு போகட்டும். இல்லாட்டா சும்மா கெடக்கட்டும்” தீர்மானமாக கூறினாள் லலிதம்மா.

“மம்மீ! தினமும் எனக்கு பெரிய டம்ளர் நெறய பால் கொடுத்து குடி குடீன்னு தொந்தரவு செய்யறியே! நம்ம வீட்டு புஜ்ஜி நாய்க்கு பிளேட் நெறையா பாலு ஊத்தறோமே! நாளைலேர்ந்து ராணிக்கும் கூட பாலு கொடுபோம் மம்மீ, பாவம்!” என்றான் நவீன் எதோ தீவிர ஆராய்ச்சி செய்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு.

“என்னதூ?” லலிதம்மாவின் கண்கள் கோபத்தால் சிவந்தன.  ‘நல்லாயிருக்கே! நாளைக்கு லட்டு தான் தின்னுவேன்னு சொல்லுவா. நாளான்னைக்கு ஐஸ் க்ரீம் கேட்பாள். கொடுப்பாயா?”

“ஆ … அப்டி இல்லம்மா! சரி. உன்னிஷ்டம்…!” என்ற நவீன் அவசரமாக அவ்விடம் விட்டு அகன்றான். அம்மாவின் கோபத்திற்கான  காரணம் அவனுக்குப் புரியவில்லை. ராணிக்கு டீக்கு பதில் ஒரு டம்ளர் பால் கொடுப்பதில் என்ன தவறு?

லலிதம்மா யோசனையில் ஆழ்ந்தாள். வேலைக்காரிக்கு யாராவது பால் தருவார்களா? எங்கேயும் கேள்விப்பட்டதில்லையே!

இரண்டு நாட்கள் கழிந்தன. நவீன் தன் பால் டம்ளரை அம்மாவுக்குத் தெரியாமல் ராணியிடம் கொடுத்து, “ஊம்.. குடி குடீ..சீக்கிரம்” என்று அவசரப்படுத்தினான்.

“ஒரு ஏழைச் சிறுமிக்கு ஒரு டம்ளர் பால் கொடுத்து புண்ணியம் சம்பாதிக்குக்கோ! அந்தக்  கொஞ்சம் பாலால நமக்கு ஒண்ணும் நஷ்டம் வந்து விடாது” ஆபீசுக்கு கிளம்பிய சேகர் மனைவியிடம் ஆதரவாகப் பேசிப் பார்த்தான் . அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

அனைவரும் வெளியில் சென்று விட்ட பின் ஒரு தூக்கம் போடுவது லலிதம்மாவின் வழக்கம். ஆனால் அன்று ஏனோ தூக்கம் வரவில்லை. வீதி வாசலிலிருந்து கூச்சலிட்டு கூப்பிடும் பிச்சைக்காரனுக்கு பத்து காசு போடுவதற்கு அவள் என்றும் தயங்கியதில்லை. ஆனால் வேலைக்காரச் சிறுமி பால் கேட்டால் மட்டும் மனம் ஏற்க மறுப்பது ஏன்? போனால் போகிறது. பாலைக் குடித்து விட்டு பலமாக வேலை செய்யட்டும். லலிதாம்மா மனதை சமாதானப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கினாள்.

மறுநாள் …! ராணி வேலையை முடித்து விட்டாள்.  நவீன் கொல்லை  வராண்டாவில் நின்று கொண்டு ராணியைக் கூப்பிட்டு தன் பால் டம்ளரை நீட்டினான். பாலைக் குடித்து விட்டு ராணி வாயைத் துடைத்துக் கொண்டாள். வாசற்படியில் வந்து நின்றாள்.

“ராணீ ! இந்தா …! இந்த டம்ளரை எடுத்துக்க!” சிறிய கண்ணாடி டம்ளரில் பாலை நீட்டினாள் லலிதம்மா. ராணி அதை பார்த்து பேசாமல் நின்றிருந்தாள்.

“ஊம் …இந்தா! வாங்கிக்க!”

ராணி டம்ளரை வாங்கி கடகடவென்று குடித்து விட்டு அதைக் கழுவி வாசற்படி அருகிலேயே கவிழ்த்தாள். கொல்லை வராண்டாவிலிருந்து நவீனும், தன் அறை வாசலிலிருந்து  சேகரும் ராணி இரண்டாம்  முறை வாயைத் துடைத்துக் கொள்வதை கவனிக்காமலில்லை. ராணி மெளனமாக வாயில் கேட்டை மூடி விட்டு கிளம்பிச் சென்றாள்.

லலிதம்மாவுக்கு ஏனோ மனம் ஆறவில்லை. மகன் மேலும் கணவன் மேலும் கோபம் குறையவில்லை. இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டு இதற்கு இணங்க வேண்டியதாகி விட்டது. அறையிலிருந்து வெளியில் வந்த கணவனை முறைத்துப் பார்த்தாள்.

“நாலு நாளைக்குப் பால் தருவேன். அவ்வளவு தான்…!” கணவன் காதில் விழும்படியாக உரக்கக் கூறினாள்.

“உன்னிஷ்டம் போல் செய்து கொள். இடுப்புவலி, இதயவலி வராமல் உன்னைக் காப்பாற்றிக் கொள்வாயோ அல்லது ஒரு கிளாஸ் பால் அந்த சின்னப் பெண்ணுக்கு ஊற்றுவாயோ யோசிச்சுக்கோ!” சேகர் அமைதியாக அவளை பார்த்துக் கூறினான்.

லலிதம்மா பதில் பேசவில்லை. அதன் பின் அது பற்றி வீட்டில் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இரண்டு பால் டம்ளர்களை கழுவி ஒன்றை ஷெல்பில் ரகசியமாகவும் மற்றொன்றை சமையலறை வாசற்படி அருகிலும் வைத்துச் செல்கிறாள் ராணி. சூழ்நிலை அமைதியாக இருந்தது.

இரண்டு மாதங்கள் ஆயின. ராணியின் கன்னங்கள் கொஞ்சம் உப்பி முகத்தில் புது அழகு தென்பட்டது. லலிதம்மாவுக்கும் நல்ல ஓய்வு கிடைத்து சிடுசிடுப்பின்றி கலகலப்பாக இருந்தாள்.

மீண்டும் லலிதம்மாவின் மனதில் ஏதோ ஆலோசனை.

‘இன்னும் அந்த டாக்டர் பால் குடிச்சது போதும், டீ குடி என்று கூறவில்லையா? அந்தச் சிறுக்கியிடம் கேட்க வேண்டும். அந்த டாக்டர் அட்ரஸ் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். இந்த குட்டிக்கு அப்படி என்ன  வியாதி? எதுக்காக டீ  குடிக்காதே! பால் தான் குடிக்கணும்னு சொன்னார்னு கேட்க வேண்டும்!’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.

கடிகாரத்தைப் பார்த்தாள் லலிதம்மா. காலை எட்டு ஆகியிருந்தது. வாசல் வரை வந்து தெருவில் எட்டிப் பார்த்தாள். மெதுவாக நடை போட்டு வந்து கொண்டிருந்தாள் ராணி. சிவப்பு பூ போட்ட பாவாடை சட்டை. ரெட்டைப் பின்னலில் ஒரு முழம் கனகாம்பரம் பூ. கழுத்தில் சிவப்பு மணி மாலை. தலைக்கு சிவப்பு நிறத்தில் பிளாஸ்டிக் பின்கள்.

“என்னடீ! இவ்வளவு லேட்டு?  ஆடி அசைஞ்சுக்கிட்டு வரயே! அடடா! எல்லாம் மேட்சிங் மேட்ச்சிங்கா போட்டிருக்கியே! எங்கியாவது சினிமாவுக்கு கிளம்பிட்டாப்லயா?” லலிதம்மாவின் வார்த்தைகளில் கிண்டலும் கோபமும் தெறித்தன.

ராணி பதில் எதுவும் சொல்லாமல் கேட்டின் உள்ளே நுழைந்து வேலையைத் தொடங்கினாள். வாசல் பெருக்கி மும்முரமாக அழகாகக் கோலமிட்டாள். பாத்திரம் விளக்கி வீடு பெருக்கினாள்.

லலிதம்மா பால் டம்ளரை சமையலறை வாசற்படியில் ணங்கென்று வைத்தாள். பாலைக் குடித்து விட்டு கிளாஸைக் கழுவி கவிழ்த்த ராணி, “இனிமே வேலைக்கு வர மாட்டேங்கம்மா…!” என்றாள்.

“ஏனடீ! என்ன ஆச்சு உனக்கு?”

“ஒண்ணுமில்லங்கமா…! நாளைலேர்ந்து ஸ்கூல் தெறக்கறாங்க இல்லையா?” ராணியின் சொற்களில் மகிழ்ச்சி தென்பட்டது.

“அப்படீன்னா? ஸ்கூல் தொறந்தா உனக்கென்ன வந்தது?” லலிதம்மாவுக்கு விளங்கவில்லை.

“நான் நாலாங்கிளாஸ் பாஸாயிட்டேங்கம்மா! அஞ்சாங்கிளாஸ் போறேன்”. அவிழ்ந்திருந்த சிவப்பு நீற  ரிப்பனை பின்னலில் இறுக்கி முடிந்து கொண்டாள் ராணி.

லலிதம்மாவுக்கு இதயம் நின்று விடும் போலாயிற்று. ‘அதாவது இந்த சர்ப்பா என்கிற சொரூபராணி ஐந்தாம் கிளாஸ் படிக்கிறாளா? அடேங்கப்பா…! இரண்டு மாத விடுமுறையில் வீட்டு வேலை செய்து செலவுக்கு பணம் சம்பாதிக்கிறாளா? பின் இவளுக்கு என்ன வியாதி? டாக்டர் பால் குடிக்ககச் சொன்னார் என்றாளே!’

யோசனையோடு லலிதம்மா ராணியை தீர்க்கமாகப் பார்த்தாள். ராணியின் கையிலிருந்த சிவப்பு வளையல்கள் வெயில் பட்டு ஒளிர்ந்தன.

“பின்னே உனக்கு என்ன வியாதி? டாக்டர் ஏன் உன்னை பால் குடிக்கச் சொன்னாரு?”

“அதாங்க…? சும்மா தான் சொன்னேன்..!” டக்கென்று பதிலளித்தாள் ராணி.

‘என்ன? சும்மா சொன்னாயா? டாக்டர் சொன்னதாகச் சொன்னாயே?”

‘அம்மா…! நீங்க… புஜ்ஜி நாய்க்கு கிண்ணம் நிறைய பால் ஊற்றச்  சொல்லி எங்கிட்டே கொடுப்பீங்க இல்ல…? எனக்கும் பால் ரொம்ப பிடிக்கும். அதைப் பார்த்து எனக்கும் பால் சாப்பிடணும்னு  ஆசையா இருந்ததும்மா ..!  சும்மா கேட்டா தர மாட்டீங்க இல்ல…? அதான்… டாக்டர் சொன்னாருன்னு சொன்னேன். அப்போ தான் இரக்கப்பட்டு தருவீங்கன்னு அப்டிச் சொன்னேனம்மா…!” தலையைக் குனிந்து கொண்டே ராணி பதிலளித்தாள்.

“என்ன..?” வியந்து போனாள் லலிதம்மா.

‘சாரிங்க அம்மா!” ராணி லேசாக தலையை நிமிர்த்திப் பார்த்துக் கூறினாள். லலிதம்மாவின் அருகே  நவீன் நின்றிருந்தான்.

“அது …வந்து… மம்மீ …!. உன்கிட்டே பொய் சொல்லி தினமும் ஒரு டம்ளர் பால் கேட்டு குடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறா ராணி !” நவீனுக்கு ஏனோ சிரிப்பு வந்தது.

இரண்டு மாதம் முன்பு  தான் இந்த ஒரு டம்ளர் பால் கொடுப்பதில் பிடிவாதம் பிடித்த விஷயம் நினைவு வந்து வெட்கப்பட்டாள் லலிதம்மா.

‘பாவம்! சின்னப் பெண் தானே! அதிலும் ஏழை. சும்மா கேட்டால் உடனே தந்திருப்பேனா, என்ன? பாவம்! இவர்களின் சின்னச் சின்ன ஆசைகள் தீருவது எவ்வாறு?’

ராணி வாசல் படியருகில் நின்றிருந்தாள்.

“ராணீ! ஒரு நாலு நாள் கழிச்சு வீட்டுக்கு வா. உனக்கு ஒரு பாவாடையும் சட்டையும் வாங்கித் தரேன்!'” என்றாள் லலிதம்மா.

“வேண்டாங்கம்மா! எனக்கு ஸ்கூல்ல யூனிபாரம் கொடுப்பாங்க!” ராணி தலையை ஆட்டி மறுத்த போது அவள் கழுத்திலிருந்த சிவப்பு மணிமாலை மினுக் மினுக் என்று பளிச்சிட்டது.

“சரி. போனா போகுது. ராணீ! உனக்கு எப்போவாவது பால் குடிக்கணும் போல இருந்தா வீட்டுக்கு வா. திருப்தியா பாலு குடிச்சுட்டு போகலாம். நாங்க எதுவும் நினைச்சுக்க மாட்டோம். அய்யாவும் நவீனும் எதாவது சொல்லுவாங்களோன்னு நினைக்கிறயா? அதை நான் பாத்துக்கறேன். சங்கோஜப்படாம  வா. என்ன?”

லலிதம்மா பெருந்தன்மையோடு கூறுவதைக் கேட்டு நவீனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“நிஜாமாத் தான் சொல்றேன் ராணீ!”  லலிதம்மா மீண்டும் கூறினாள்.

ராணி லேசாகச் சிரிப்பதைப் பார்த்து  பின்னால்  திரும்பிப் பார்த்த லலிதம்மாவுக்கு கோபம் வந்தது. அங்கு நவீனும் சேகரும் புன்சிரிப்போடு நின்றிருந்தார்கள்.

ராணி வாசல் கேட்டருகில் வளர்ந்திருந்த சிவப்பு செம்பருத்திப் பூ ஒன்றைப் பறித்து தலையில் செருகிக் கொண்டாள். கேட்டை மூடி விட்டு சிரித்துக்கொண்டே வெளியேறினாள்.

லலிதம்மாவுக்கு கிராமத்திலிருந்த தன் தாத்தா வீடு ஞாபகம் வந்தது. அந்த வீட்டில் பெரிய கொய்யா மரம் இருக்கும். தாத்தா இரண்டு பழங்கள் செங்காயாக பறித்து ஒளித்து வைப்பார். நாங்கள் யார் கேட்டாலும் அதைத் தர மாட்டார். பின் யாருக்காக  அவை? வீட்டு வேலைக்காரச் சிறுவன் ராமுடுவுக்குத் தருவார். நாங்கள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டால், தாத்தா சமாதானப்படுத்துவார்.

“ஆமாம். நீங்க மரத்து மேல ஏறி வேணுங்கற பழம் பறிச்சு திங்கறீங்க. பாவம். ராமுடு. அவனுக்கு  ஒரு காயாவது தாறீங்களா? இல்லையே! ஆனா ரொம்ப பழுத்த பழம் அவனுக்குப் பிடிக்காதாம். அதனால தான் நான் ஒளிச்சு வெச்சு அவனுக்கு கொடுக்கறேன்” என்பார் தாத்தா.

ராமுடு வீட்டில் எவ்வளவோ வேலை செய்வான். அவனுக்காக மிட்டாய், பிஸ்கட் எல்லாம் ரகசியமாக  ஒளித்து வைத்து கொடுப்பார் தாத்தா. அந்த வீடு, அந்த கொய்யா மரம், ராமுடு, தாத்தா… எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக கண் முன் நின்றார்கள். லலிதம்மா கண்ணை மூடிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. வீட்டிற்கு புது பணிப்பெண் வேலைக்கு  வந்தாள்.  ராமுலம்மா வேலையை முடித்து விட்டு வாசல் வராண்டாவில்  நின்றிருந்தாள்.

“இந்த பாலு… குடி…!” கண்ணாடி டம்ளர் நிறைய பால்  ஊற்றிக் கொடுத்தாள் லலிதம்மா.

அதை பார்த்து வியந்து போனாள் ராமுலம்மா.

“உனக்குத் தான் குடி. பரவாயில்லை” என்று உற்சாகப்படுத்தினாள் லலிதம்மா.

‘இவுங்க பணக்காரங்க போல. வேலைக்காரிக்கு கூட பால் தர்றாங்க. ஆனா இதுவே நமக்கு எப்பவும் கிடைக்குமா? இவுங்க நம்மள வேலைய விட்டு தூக்கிட்டா? வேற வீட்டுல பால் தருவார்களா என்னா? இப்போ என்ன செய்வது? பாவம் இந்த  வீட்டம்மாவுக்கு ரொம்ப நல்ல மனசு போல. இவுங்க மனசை கஷ்டப்படுத்தக் கூடாது. எதையாவது சொல்லி மறுத்துடணும்’.

ராமுலம்மாவின் கண்கள் பால் கிளாசையே பார்த்திருந்தாலும் மனம் பல யோசனைகளை செய்தது.

“ஊம் , பாலை வாங்கிக்க.. வெட்கப்படாதே!”

“அம்மா! ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதீங்க! எனக்கு பால் ஒத்துக்காதுங்க. டாக்டர் பால் குடிக்க வேண்டாம்னு சொல்லியிருக்காரு. எனக்கு சரியா ஜீரணம் ஆகாது. டீ குடிக்கச் சொன்னாரு. அதான்….!” பால் டம்ளரை ஆசையோடு பார்த்தபடியே பதிலளித்தாள் ராமுலம்மா. லலிதம்மாவும் பால் டம்ளரை பார்த்த வண்ணம் சமையலறை வாசலில் வாயடைத்துப் போய் நின்று  விட்டாள்.

தெலுங்கில் எழுதியவர்: டாக்டர் முக்தேவி பாரதி
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
ராஜி ரகுநாதன்,

M.I.G-A-110,

Dr.A.S.Rao Nagar,

Hyderabad-500062

Mobile: 9849063617

AKSHRA
error: Content is protected !!