நமக்கல்லவோ அவமானம்?

 மலையாளத்தில்: அய்யப்ப பணிக்கர் 

ஆங்கிலம் வழித் தமிழில்: மாலன் 

நவீன மலையாளக் கவிதைகளின் முன்னோடி முனைவர் அய்யப்ப பணிக்கர். கபீர் விருது, ஆசான் பரிசு, மகாகவி உல்லூர் விருது,  வள்ளத்தோள் விருது, கங்காதர் மெகர் தேசிய விருது எனப் புகழ் வாய்ந்த இந்தியக் கவிகளின் பெயரால் அமைந்த பல விருதுகளை வென்றவர். வேதம் காலம் தொடங்கி  சமகாலம் வரை, வாய்மொழி மரபு உள்பட, விரியும் இந்தியக் கதையாடல் குறித்து மிகச் சிறப்பானதொரு நூலை எழுதியவர்.  சாகித்ய அகாதெமி வெளியிட்ட,இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பங்களித்தவர்

அடுக்களையில்

ஒவ்வொரு இரவிலும்

உணவைக் கொஞ்சம்

விட்டு வைக்க வேண்டும்

ஒருவேளை

திருடன் வந்தால்

அவன் பசித்திருந்தால்

உணவில்லை என்றால்

அவன் சினமடையக் கூடும்.

வெறுத்துப் போய்

திருடாமலேயே திரும்பி விடுவான்

அது நமக்கல்லவோ அவமானம்?

***

To read the poem n English:

http://www.akshra.org/isnt-that-shameful-for-us/

நகரத்துக் காளை

தெலுங்கில் :ஸ்ரீ ஸ்ரீ

ஆங்கிலம்வழித் தமிழில்: மாலன்

ஸ்ரீ ஸ்ரீ

புராண, இதிகாச, தொன்மங்கள் தெலுங்குக் கவிதையில் மண்டிக் கிடந்த போது சமகாலப் பிரச்சினைகள் குறித்து தெலுங்கில் கவிதைகள் எழுதி, அதை முன்னெடுத்துச் சென்றவர் ஸ்ரீஸ்ரீ என்றறியப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீநிவாசராவ். தெலுங்கு மரபுக் கவிதைகளில் காணப்படாத சந்தங்களைத் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர். எதிர் கவிதைகளின் முன்னோடி. அவரது கவிதைகள் குரலற்றவர்களின் குரல்

 

 

நகரின் முக்கிய வீதியில்

அரைக் கண்ணை மூடி

அசை போட்டுக் கொண்டிருக்கிறது

நிதானமாக அந்தக் காளை

கடந்த பிறவியின் நினைவுகளோ?

சாலைக்கே சொந்தக்காரர் போல்

தாவிக் குதித்தாடும் நாகரீகத்தை

கேலி செய்யும் பொறுப்பைக்

காலத்தின் கையில் கொடுத்து விட்டு

நகரின் நடுவே

நகராமல்,அசையாமல்

அரசன் போல் நிற்கிறது காளை

அதை நகரச் சொல்லிக் கேட்க

யாருக்குத் துணிவுண்டு

ஓரக் கண்ணால் உருட்டிச்

சுற்றும் முற்றும்

பார்ப்பதைப் பாருங்கள்

ஏய்! ஏய்! கார்க்காரா

என்ன அவசரம் உனக்கு?

சைக்கிள் தம்பி! பார்த்துப் போ!

அது சற்றும் அசையாது

எந்திரங்களின் எதிரி

மரக்கறியின், அஹிம்சையின் போதகர்

மது எதிர்ப்பு வல்லுநர்

நகரின் மையச் சாலை நடுவே

பொதுமக்களின் பாதையை மறித்துக் கொண்டு

இதைப் போல எத்தனை காலம்தான் நிற்கும் காளை?

 

காளைக்குத்தான் அறிவில்லை என்றால்

மனிதருக்கு இருக்கக் கூடாதா?

இந்தக் கவிதையின் தெலுங்கு மூலத்தை வாசிக்க:

 

இந்தக் கவிதையின் ஆங்கில மூலத்தை வாசிக்க:

http://www.akshra.org/bull-in-the-city/

துக்கங்கள் நிறைந்த மழை மேகம் நான்

 

இந்தியில்: மகா தேவி வர்மா

தமிழில் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி

மஹாதேவி வர்மா (1907-1987) ஹிந்தி இலக்கியத்தில் “சாயா வாத்/ரஹஸ்ய வாத்” என்கிற பிரிவைச் சேர்ந்த கவிஞர். இப்பிரிவின் முக்கிய தூண்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது கவிதைகளில் கருணை, புரிதல்,துயரம் போன்ற சுவைகள் அதிகம் காணக்கிடைக்கின்றன. இவரை “நவீன மீரா பாய்” என்றழைக்கிறார்கள். ஏழு தலைமுறைகளுக்குப் பிறந்த பெண்னானதால் இவருக்கு மஹாதேவி என்று பெயரிடப்பட்டது. ஒன்பது வயதில் திருமணம். இவர் ஞானபீட விருது,பத்ம விபூஷண் விருது போன்றவைகளால் கௌரவிக்கப்பட்டவர்.

இவரது கவிதைகளில் “நான் துக்கங்கள் நிறைந்த மழைமேகம்” மிகவும் பிரபலமானது.சிறு வார்த்தைகளில் மஹாதேவி வர்மா, தன்னைப்பற்றி இந்த கவிதையில் கூறியுள்ளார்.

இந்தக் கவிதையில் தன் வாழ்க்கையை சூல் கொண்ட மேகத்துடன் ஒப்பிட்டு, ஆழ்மனதின் தாபங்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக்கவிதையை மேகத்தின் குரலாகவும்,பெண்ணின் ஆழ்மனத் தாபங்களாகவும் அதே நேரம்சமூகத்தில் பெண்களின் நிலையைக் குறிப்பதாகவும் புரிந்துகொள்ள முடிவது இக்கவிதையின் சிறப்பு

 

துக்கங்கள் நிறைந்த மழை மேகம் நான்.

அசைவுகளின் ஊடே

எப்போதும் அசைவற்று நிற்பவள்.

புலம்பல்களினூடும் கர்ஜனைகளினூடும்

எப்போதும் சிரித்து மகிழ்பவள்.

கண்களில் விளக்குகளின் ஒளியும்
இமைகளில் விரியத் தயாராய் நதியும்

எப்போதும் என்னுடன்.

இசையால் நிரம்பியவை என் ஒவ்வொரு அடியும்.

கனவுகளின் மகரந்தம் ஒவ்வொரு மூச்சிலும்.

ஒன்பது வண்ணங்கள் கொண்ட மேலாடையை

நெய்து உடுத்தியிருக்கிறது வானம்.

மலய மாருதம் என் நிழலில்இளைப்பாறுகிறது.

தொடுவானை நிறைத்த கரும்புகை போல்

என் புருவங்களின் மத்தியில் கவலைச்சுமை.

மண் மீது நான் மழையாய் பொழிந்தேன்.

புதையுண்ட விதைகளை சிறு பச்சை முளைகளாய்

நாற்புறமும் உயிர்க்க வைத்தேன்.

என் வருகையினால் எந்தப் பாதையும் அசுத்தமுறவில்லை.
நான் போகும்போதும் எந்தச் சின்னங்களையும் விட்டுச்செல்லவில்லை.
எஞ்சிநிற்பவை

அகமும் புறமும் சிலிர்க்கச் செய்யும்

நினைவுகள் மட்டுமே.

நேற்று முழங்கி

இன்று பொழிந்து

வந்த வழியே திரும்பச் செல்வேன்.

உலகம் சிலிர்த்தது என் வருகையில் மகிழ்ந்து.

விரிந்து பரந்த விசும்பின் நீள அகலங்களை நான் தழுவியபோதும்
அதன் சிறு மூலை கூட எனக்கானதில்லை.

இதுவே என் அடையாளம்.

இதுவே என் சரித்திரம்.

பொங்கிப் பொழிந்து மறைவேன்

***  

இந்தக் கவிதையின் இந்தி மூலத்தை வாசிக்க:

http://www.akshra.org/%e0%a4%ae%e0%a5%88%e0%a4%82-%e0%a4%a8%e0%a5%80%e0%a4%b0-%e0%a4%ad%e0%a4%b0%e0%a5%80-%e0%a4%a6%e0%a5%81%e0%a4%83%e0%a4%96-%e0%a4%95%e0%a5%80-%e0%a4%ac%e0%a4%a6%e0%a4%b2%e0%a5%80/

வெள்ளை மனக் கடவுள்

இந்தியில் : மகாதேவி வர்மா

தமிழில்: அனுராதா கிருஷ்ணஸ்வாமி

 

குளிர்ந்த நீரில் நீராட்டிக்
குளிரக் குளிரச் சந்தனம் சாத்துகிறாள் அம்மா
இவருக்கான படையலுயும் எங்களுக்கே .
எனினும்

இவர் ஒன்றும் சொல்வதில்லை.
அம்மாவின் கடவுள்

வெகுளி

போலநாத் என்ற கடவுளைப் பற்றி மகதேவி வர்மா எழுதிய இந்தக் கவிதையில் போல என்பதை இரு அர்த்தங்களில் பயன்படுத்துகிறார். ஒன்று கடவுளைக் குறிக்கும் பெயர். மற்றொன்று  அவரது வெள்ளை மனம். இந்தக் கவிதையின் இந்தி மூலத்தைப் படிக்க:

http://www.akshra.org/%e0%a4%a0%e0%a4%be%e0%a4%95%e0%a5%81%e0%a4%b0-%e0%a4%9c%e0%a5%80-%e0%a4%ad%e0%a5%8b%e0%a4%b2%e0%a5%87-%e0%a4%b9%e0%a5%88%e0%a4%82-%e0%a4%ae%e0%a4%b9%e0%a4%be%e0%a4%a6%e0%a5%87%e0%a4%b5/

அதிகாரம்

ஹிந்தியில்:  வாஜ்பாய்

தமிழில்: மாலன்

வெள்ளந்திக் குழந்தைகள்;
முதிர்ந்த மாதர்;
இளைஞர்;
ஆட்சி பெறுவதற்கான
படிகளா
இவர்களின் பிணங்கள்?

இந்தப் படிகளில் ஏறி
அரியணையில் அமர்வோரிடம்
எனக்கொரு கேள்வி:
இறந்த இவர்களோடு-
-அவர்களது சமயம்  வேறாகவே இருக்கட்டும்-
உங்களுக்கு சம்பந்தம்
ஏதுமில்லையா?
அவர்கள் இந்த மண்ணில்
பிறக்கவில்லையா?

‘பூமித் தாயின் புதல்வர்கள் நாம்’
வெறுமனே உரைப்பதற்கு மட்டுமா
இந்த வேத வாசகம்?
பின்பற்றுவதற்கில்லையா?

உயிரோடு எரிக்கப்பட்ட குழந்தைகள்
வன்புணரப்பட்ட பெண்கள்
சாம்பலான வீடுகள்
இவை நாகரீத்தின் மீது
நடத்தப்ப்பட்ட தாக்குதல்
நாட்டுப்பற்றின்
பதக்கங்கள் அல்ல
அவை
மிருகத்தனத்தின் கொள்கை அறிக்கை
அறத்தின் சீரழிவு
இவர்களின் தாய் மலடியாகவே இருந்திருக்கலாம்
இந்த மகன்களைப் பெற்றதற்கு.
அப்பாவிகளின் ரத்தக்கறை படிந்த
அரியாசனம்
சுடுகாட்டுப் புழுதியினும் இழிந்தது

AKSHRA
error: Content is protected !!