Era Murukan

அக்ஷர குறித்து இரா. முருகன்

2005-ம் ஆண்டு தொடங்கி நான் பிரிட்டனில் ஸ்காட்லாந்துத் தலைநகரான எடின்பரோவில்  பணி நிமித்தமாக வசித்துக்கொண்டிருந்த நாட்கள். வார இறுதி மாலை நேரங்களில் அவ்வப்போது ஒரு கோப்பை பியரோடு அமர்ந்து, ஆங்கிலேய மற்றும் சக இந்திய நண்பர்களுடன் கலை, இலக்கியம், வரலாறு குறித்து உரையாடுவது வழக்கம்.

இப்படியான ஓர் அமர்வின் போது ஒரு ஸ்காட்டிஷ் நண்பர், ‘ஸ்காட்டிஷ் இலக்கியம்’ என்ற சொற்றொடரை எடுத்தாண்டார். “ஸ்காட்லாந்திலே எழுதப்படறதெல்லாம் இங்கிலீஷ் படைப்பு ஆச்சே..  ராபர்ட் ப்ரவுன், ஆர்.எல்.ஸ்டீவன்ஸன், ம்யூரியல் ஸ்பார்க் இப்படி எல்லோரும் எழுதினதெல்லாம் ஆங்கில்  இலக்கியம் தானே” என்று நான் கேட்க, அவர் உடனே “ஸ்காட்லாந்தில் இருந்து, ஸ்காட்லாந்தைப் பற்றி எந்த மொழியிலே எழுதினாலும் அது ஸ்காட்டிஷ் இலக்கியம் .. நீங்களே இங்கே இருந்து இந்த எடின்பரோ பற்றி உங்க மொழியிலே ஒரு நாவல் எழுதினா, அது ஸ்காட்டிஷ் இலக்கியம்” என்று ஒரு புதுக் கோட்பாட்டை முன்வைத்தார்.

யோசித்துப் பார்க்கும்போது, அவர் சொல்வதிலும் அர்த்தம் உண்டு என்று எனக்குத் தோன்றியது, இந்தியாவில் செப்பு மொழி இருபத்து நான்கு – ஆங்கிலமும் வடமொழியும் உட்பட.  எழுதி, வாசிக்கப்படும் மொழிகளான இவற்றில் எந்த மொழியில் எழுதினால் என்ன? இந்தியாவில்  அல்லது வெளியே இருந்து, இந்தியா பற்றி எழுதுவது எல்லாம் இந்திய இலக்கியம் தான்.

இந்திய இலக்கியத்தை ஒரே இடத்தில் படிக்க, எழுதிப் பாதுகாக்க, கூடிக் கொண்டாட ஒரு தலம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

சிவப்பு ஒயின் அதிகமாக வார்க்கப்பட்டு நாங்கள் கிட்டத்தட்ட அநுபூதி நிலையில் இருந்த அந்த வார இறுதி சாயங்கால அமர்வு நீண்டுபோக, ஹைதராபத்திலிருந்து வந்திருந்த ஒரு தெலுங்கு பேசும் நண்பர் (ஹைதராபாத் என்பதால் உருதுவும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்), சதத் ஹுசைன் மாண்டோவின் ‘கோல்தோ’ (’திற’!) என்ற உருதுச் சிறுகதை பற்றி ’இந்தியாவில் எழுதப்பட்ட உன்னதமான ஒரே கதை அது’ என்று கருத்துச் சொன்னார். நான் அப்போது கூறினேன், ‘கோல் தோ உன்னதமான ஒரு கதையாக இருக்கலாம்.. ஆனால் உன்னதமான ஒரே கதை இல்லை’.  சொல்லிவிட்டு, அந்தச் சிறுகதையின் கருவைத் தன் அமைதியும் நேர்த்தியுமான கதைப்போக்கில் ஒரு நிகழ்வாக ஆக்கி நடைபோடும் தமிழ் நாவலான அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’ பற்றிக் கூறினேன். ‘அது இந்திய நாவல். 1947-ஆம் ஆண்டு, தேசப் பிரிவினை காலத்தில் முழுக்க முழுக்க தெலுங்கும் உருதுவும் புழங்கும் ஹைதராபாத்தில் நிகழும் புதினம்’ என்று முடிக்க,  சுந்தரத் தெலுங்கரின் வியப்பு ஓயவே இல்லை.

நாம் எல்லோரும் நம் அண்டை வீடுகளில் இருக்கும் சகோதர்களோடும் நண்பர்களோடும் கலந்துரையாடிக் கலையையும், கலாசாரத்தையும், கவிதை, கதையையும் பகிர்ந்து அனுபவிக்க ஏன் நம் ஜன்னல்கள் திறக்கப்படவில்லை? கணினி யுகமான இந்நாளில் ஏன் இதுவரை யாரும் பெரிய அளவில் இந்திய மொழிகளுக்கு இடையே இணைய இலக்கியத் தொடர்புக்கு முயலவில்லை  என்ற விசாரம் என்னை அலைக்கழிக்க, நாட்கள் நீங்கின.

ஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஒரு லிபி. கம்ப்யூட்டரில் அத்தனையும் எப்படி ஏற்றி வைத்து இயக்கிப் பலமொழி இலக்கிய இணையத் தளம் அமையும் என்ற கவலைக்கு இடமின்றி, ஒருங்குகுறி என்ற யூனிகோட் எழுத்துருவம் கொண்டு எம்மொழியிலும் கணினியில் எழுதிப் படிக்கலாம் என்ற நிலமை உருவானது அப்புறம்.

இந்தத் தொழில்நுட்ப வசதியோடு, இந்திய மொழிகள் 24 – லும் ஒரு பத்திரிகை இருந்தால் ஒரே இடத்தில் அனைத்து மொழிகளிலும் எல்லாவற்றையும் படிக்கலாமே… ஒரு மொழியில் உள்ளதை அப்படியே மொழிமாற்றம் செய்து எல்லா மொழிக்காரர்களும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாமே.

என்னுடைய இந்த ஆசை நண்பர் மாலன் மூலம் நிறைவேறியது

அண்மையில் அவர் எனக்குத் தொலைபேசி, ‘www. Akshra.org’ என்று ஒரு புது இணையத்தளம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. சென்று பார்த்தீர்களா?” என்று அன்போடு விசாரித்தார். போனேன்.

Akshra.org என்ற  பெயரே மிகவும் ஈர்ப்புள்ளதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக .org என்பது சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தளம் என்பதால் என்னை வெகுவாக கவர்ந்தது.

1980-களில் எழுத்தின் அடையாளமாக ‘திசைகள்’ இருந்து வந்தது. மாலன் தலைமையிலான அந்த இதழில் பங்களித்த இளம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கட்டற்ற சுதந்திரம் கொடுத்து ஊக்கமளித்தார். கூடவே மூன்று அன்புக் கட்டளைகளுடன் ஒரு நிபந்தனையும் கொடுத்திருந்தார்… ‘எழுத்து, சாதி மதம் இனம் பார்க்காமல் பொதுவானதாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தக் கூடாது… கண்ணியமாக எழுத வேண்டும்…’ .

மற்ற படைப்பாளிகளிடம் எதிர்பார்க்கும் இந்த சுய அத்துக்களையும், பொறுப்புத் தரித்தலையும் தன் எழுத்திலும் வாழ்விலும் கடைப்பிடிக்கும் நல்ல நண்பர் அவர். தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்துக்கான ஒரு கருவியாக நேசிப்பவர்.

2018 –ல் இணையப் பத்திரிகையின் தீர்க்கமான அடையாளமாக, எல்லோருக்கும் தெரிய வேண்டிய எடுத்துக்காட்டாக மாலன் ஆரம்பித்துள்ள அக்ஷர,   வெகு விரைவில், உருவ, உள்ளடக்கச் செறிவோடு இந்தியா முழுவதும் சென்றடைந்து, வெகுவான வாசகர்களை, முக்கியமாக இளைய தலைமுறையினரைக் கவர்ந்து, அனைவருக்கும் இலக்கிய, கலாச்சார பகிர்வு – நுகர்வு அனுபவம் என்னும் பெரும்பயன் தருவதாக அமையப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அக்ஷர இணையத் தளத்தில் வெவ்வேறு மொழிகளுக்கான பக்கங்களுக்கு மாறி நூல்பிடித்துப் போக இணைப்புகள், ஒலிப் புத்தகங்கள், மொழி மாற்றப் படைப்புகளை அந்தந்த பக்கங்களிலேயே சொடுக்கித் தேர்ந்தெடுத்துப் போய்ப் படிக்கின்ற வசதி….  அற்புதமான அக்ஷர

மாலனுக்கும், அக்ஷரவுக்குக்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்

இரா. முருகன்
A techno-banker & project manager
also a Tamil,English novelist, playwright, screen writer& translator

AKSHRA
error: Content is protected !!