Kalapria

அக்ஷர குறித்து கலாப்ரியா

போபாலில் உள்ள ‘பாரத் பவன்’ என்ற அமைப்பு இந்தியக் கலைகளை அகில உலகிற்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட்து. அதனை அன்றைய முதல்வர் அர்ஜுன் சிங் ஆரம்பித்து பிரபல இந்திக் கவிஞரான அஷோக் வாஜ்பேயி பொறுப்பில் தந்தார். ஷ்யாமளா ஹில்ஸ் என்ற இட்த்தில் இருக்கும் அதை ஒரு கலைக்கோவில் என்பேன்.

அங்கே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஒருமுறை நடை பெறும் ‘Poetry Triannal” என்கிற கவிஞர்களின் சங்கமம் மிக முக்கியமானது. தமிழிலிருந்து,ஒரு முறை ஞானக்கூத்தன், மீரா போன்றோரும். இன்னொரு முறை பிரம்மராஜன், தேவதேவன் லதா ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். அகில இந்தியாவிலிருந்து அனைத்து மொழி எழுத்தாளர்களும் ஒன்று கூடி மூன்று நாட்கள் கவிதை வாசிப்பு, கருத்தரங்கு என் மிக விமரிசையாக நடந்தது. அனைத்துக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அருமையான வடிவில் புத்தமாகவும் வெளியிட்டார்கள்.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால்  ஒரே மொழி பேசும் இருவரை ஒரு அறையில் தங்க வைக்காமல், திட்டமிட்டே, வெவ்வேறு மொழி பேசுவோர் இருவரை ஒரு அறையில் தங்க வைத்திருந்தார், அஷோக் வாஜ்பேயி. முதல்நாள் அது பெரும் சங்கடமாக இருந்தது. இரண்டாவது நாள்தான் அதன் அருமை புரிந்தது. தட்டுத் தடுமாறி ஒருவருக்கொருவர் தங்கள் கவிதைகளையும் தங்கள் மொழியில் நடக்கும் கவிதைப் போக்குகளையும் குறித்து மிகுந்த தோழமையுடன் பகிர்ந்து கொண்டோம். அதந்த யோசனை கிட்டத்தட்ட ஒரு மொழி பெயர்ப்பு பட்டறை போலச் செயல்பட்டது.

என்னுடன் சஞ்சீவ் பட்லா என்ற இந்திக் கவிஞர் தங்கியிருந்தார். அவர் “Poetry chronicle” என்ற ஆங்கிலப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் இந்திய மொழியின் கவிதைகளை வெளியிடுவார். எனது ”ஸ்ரீ பத்மனாபம்” என்கிற கவிதை பற்றிப் பேசியபோது அதை அவசியம் தனக்கு மொழிபெயர்த்து அனுப்பச் சொன்னார். நகுலன் மொழிபெயர்ப்பில் அந்தக் கவிதை அதில் வெளி வந்தது. அவருடைய ஹைகு கவிதைகளை நான் தமிழில் மொழி பெயர்த்தேன். சதங்கையில் வெளிவந்த நினைவு.

இப்போது எதற்கு இந்த சுய தம்பட்டம் என்று கேட்கலாம். மாலன் முன்னெடுத்து நடத்தி வரும் அக்‌ஷ்ரா மின்னிதழைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது.

இப்போது இணையம் மூலம் பூமியே ஒரு சிறு கிராமமாகி விட்ட சூழலில் மின்னிதழில் அனைத்து இந்திய எழுத்துக்களையும் ஓரிடத்தில் சேர்ப்பது சொல்லளவில் எளிது. செயலளவில் அதைத் திறம்படச் செய்வது கடினம். அதை மாலன் மிக்க பொறுப்புடனும் ஈடுபாட்டுடனும் செய்து வருகிறார். 24 மொழிகளின் படைப்புகளை ஒரு சேரத் தருவதென்பது மிகப்பெரிய காரியம். வெளிநாட்டு எழுத்துக்களைத் தருவதுதான் சிறு பத்திரிகையின் குணாதிசயம் என்ற ஒரு பொதுப் போக்கிற்கு மாற்றாக, இந்திய மொழிகளின் படைப்புகளை இப்படி ஒருங்கிணைப்பது மிக முக்கியமான செயல். அவசியமானதும் கூட.

உலக அளவில் இந்தியப் படைப்புகள் சென்றடைய ஆங்கிலத்திலும் அந்தந்த மொழியிலும் வெளியிடுவதன் சிரமம் நன்கு புரிய முடிகிறது. இதில் மாலனுக்குத் துணையாக நிற்கும் தொழில் நுட்ப உதவியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாலனுக்கும் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த மின்னிதழ் குறித்து தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும்.என்னளவில் இதை நான் அவசியம் செய்வேன்.

அன்புடன்

கலாப்ரியா
எழுத்தாளர், கவிஞர்

AKSHRA
error: Content is protected !!